அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தம் முறையான முறையில் நிறைவேற்றப்படாததால், அடுத்த அதிபர் தேர்தலை மக்கள் கருத்து கணிப்பு மூலம் அங்கீகரிக்கும் வரை அரசியலமைப்பு மீறல் என தீர்ப்பளிக்குமாறு உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அருண லக்சிறி உனவதுன சட்டத்தரணியால் இந்த மனு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த மனுவில், தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் அதன் உறுப்பினர்கள், நாடாளுமன்ற பொதுச் செயலாளர் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
19 ஆவது திருத்தச் சட்டம்
இதன் போது, அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தின் ஊடாக, ஒரு வருடத்திற்கு பின்னர் தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்றத்தை கலைக்கும் அதிபரின் அதிகாரத்தை பறிக்கும் வகையில் அரசியலமைப்பின் 70வது சரத்து திருத்தப்பட்டுள்ளதாக மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், இந்த சட்டத்திருத்தத்தை மக்கள் கருத்துக் கணிப்பிற்கு அனுப்ப வேண்டும் என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குழாம் தீர்ப்பளித்த போதிலும், அந்தத் திருத்தம் மக்கள் கருத்து கணிப்பு மூலம் அங்கீகரிக்கப்படவில்லை என்று மனுதாரர் கூறியுள்ளார்.
இந்த திருத்தத்திற்கு மக்கள் கருத்து கணிப்பு மூலம் அங்கீகாரம் கிடைத்திருந்தாலும் அதற்கு அதிபர் கையொப்பமிடாததால் இந்த திருத்தத்தை சட்டமாக கருத முடியாது என்றும் மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், 19வது திருத்தச் சட்டத்தை தொடர்ந்தும் சட்டமாக ஏற்றுக்கொள்வது தவறானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குற்றச்சாட்டு
இந்த நிலையில், 19வது அரசியலமைப்பு திருத்தத்திற்கு உட்பட்டு அதிபர் தேர்தலை நடத்த தேர்தல்கள் ஆணைக்குழு தயாராகி வருவதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும், 19வது திருத்தத்தை அங்கீகரிக்காமல் அடுத்த அதிபர் தேர்தலை நடத்துவது சட்டத்திற்கு முரணானது எனவும் மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தை சர்வஜன வாக்கெடுப்பு மூலம் அங்கீகரிக்காமல் அதிபரின் பதவிக் காலத்தை ஐந்து வருடங்களாகக் கருதி அதிபர் தேர்தலை நடத்துவதன் மூலம் தேர்தல்கள் ஆணைக்குழு நாட்டின் அரசியலமைப்பை மீறுவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
அத்துடன், இதில் பொதுமக்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகவும் தீர்ப்பு வழங்குமாறு மனுவில் கோரப்பட்டுள்ளது.
அரசியலமைப்பின் 19ஆவது திருத்தச் சட்டத்தை மக்கள் கருத்து கணிப்புக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்குமாறு நாடாளுமன்ற பொதுச் செயலாளருக்கு உத்தரவிடுமாறும் மனுதாரர் உச்ச நீதிமன்றத்திடம் மேலும் கோரியுள்ளார்.