கொழும்பில் (Colombo) உள்ள 03 அடுக்குமாடி குடியிருப்புகளின் உரிமைப் பத்திரங்களை வழங்குவதற்காக திறைசேரியால் முத்திரை மற்றும் நொத்தாரிசு கட்டணமாக 515 மில்லியன் ரூபா வழங்கப்படவுள்ளது.
2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட அனுமதி வரம்புக்கு அமைவாக உரிய நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் டபிள்யூ.எஸ். சத்யானந்தா (W.S.Sathyananda) தெரிவித்துள்ளார்.
உறுதிப் பத்திரங்கள்
இதன் படி, சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் (Ranil Wickremesinghe) வரவு செலவுத் திட்ட பிரேரணையின் பிரகாரம் கொழும்பு மாவட்டத்தில் உள்ள 50,000 அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர்களுக்கு அறுதி உறுதிப் பத்திரங்கள் வழங்கும் நிகழ்வு இம்மாதம் 17 ஆம் திகதி சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் ஆரம்பமாகவுள்ளது.
அதன்போது, நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான மிஹிந்து செத்புர, சிரிசர உயன மற்றும் மெட்ரோ வீட்டுத் தொகுதிகளின் அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர்களுக்கும், தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான வீட்டுத் தொகுதிகளில் வசிப்பவர்களுக்கும் சுமார் 1,500 உரிமைப் பத்திரங்கள் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவு
பெரும்பாலான அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர்களுக்கு உரிய உரிமைப் பத்திரம் இல்லாததால் பல பிரச்சினைகளைச் சந்திக்க வேண்டியிருக்கின்ற நிலையில், அறுதி உறுதிப் பத்திரங்கள் வழங்குவது அரசு எடுத்த வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவு என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் டபிள்யூ.எஸ். சத்யானந்தா சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், இந்த உறுதிப்பத்திரங்களை வழங்குவதற்கு அரசாங்கம் சட்டமா அதிபரிடம் ஆலோசனை நடத்தியதாகவும், கூட்டு ஆதன முகாமைத்துவ அதிகாரசபையின் சான்றிதழ் பெற்ற அனைத்து அடுக்குமாடி குடியிருப்புகளுக்கும் இந்த உறுதிகளை வழங்கும் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் செயலாளர் வலியுறுத்தியுள்ளார்.