மக்களின் பாதுகாப்பிற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளதாகவும், பாதாள உலக குழு தொடர்பில் பொதுமக்கள் ஒருபோதும் அச்சப்பட வேண்டாம் என்றும் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
குற்ற செயல்கள்
இது தொடர்பில் மேலும் கூறுகையில்,”சமூகத்தில் இருந்து ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற செயல்களை செய்யும் கும்பல்களை இல்லாதொழிக்கும் செயற்பாடுகள் மிகச் சிறந்த திட்டத்தின் கீழ் மேற்கொள்ளபடுகின்றன.
அண்மைய சம்பவங்கள் தொடர்பில் பொலிஸார் செயற்பட்டு வருவதுடன் நான்கில் மூன்று பாதாள உலகக் குழுக்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.
அச்சம் தேவையில்லை
கடந்த இரண்டரை மாதங்களில் எவ்வித அசம்பாவிதங்களும் இடம்பெறவில்லை. கடந்த 3, 4 மாதங்களில் 800 க்கும் மேற்பட்ட பாதாள உலக உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வெளிநாடுகளில் உள்ள குற்றவாளிகள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதுடன் இது தொடர்பில் பொதுமக்கள் ஒருபோதும் அச்சப்பட வேண்டாம்.” என பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.