சில செலவுகளை நீக்குவதன் மூலம் எரிபொருள் விலையை மேலும் குறைக்க வாய்ப்பு உள்ளது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickramasinghe) தெரிவித்துள்ளார்.
அத்துடன் சந்தையின் எரிபொருளுக்கமைய எமது எரிபொருள் விலையையும் சீரமைத்துக் கொள்ள வேண்டியுள்ளது என்றும் ரணில் குறிப்பிட்டுள்ளார்.
பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (Bandaranaike Memorial International Conference Hall) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்ட போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.
பொருளாதாரம் வீழ்ச்சி
அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், கடந்த காலத்தில் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தது. பொருளாதார வீழ்ச்சியுடன், சிறு வர்த்தகங்கள் உட்பட அனைத்து வர்த்தகங்களும் வீழ்ச்சி கண்டன.
அனைத்து நுண்தொழில்துறைகளும் முற்றிலும் நட்டமடைந்தன. வங்கிக் கட்டமைப்பும் பாதிப்புக்குள்ளானது. எனவே, அரசாங்கத்தைப் பொறுப்பேற்ற பின்னர், ஸ்திரத்தன்மையை உருவாக்கி, சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி, வங்குரோத்து நிலையிலிருந்து மீள்வதற்காக செயற்படுவதே எமது முதல் பொறுப்பாக அமைந்தது.
அச்சந்தர்ப்பத்தில் சர்வதேச நாணய நிதியத்துடன் ஒரு வேலைத்திட்டத்திற்கு செல்லுமாறு எமக்கு கடன் வழங்கிய அனைத்து நாடுகளும் கேட்டுக்கொண்டன. அப்போது உடன்பாடு ஏற்பட்டு அடுத்தகட்ட பணிகளை மேற்கொள்ளலாம் எனவும் தெரிவித்தன.
எரிபொருள் விலை
உத்தியோகபூர்வ கடன் வழங்குநர்ளுடன் உடன்படிக்கையை எட்டிய பின்னர் அந்தக் கட்டமைப்புடன் செயற்படலாம் என்று தனியார் கடன் வழங்குநர்களும் எம்மிடம் தெரிவித்தனர்.
சில செலவுகளை நீக்குவதன் மூலம் எரிபொருள் விலையை மேலும் குறைக்க வாய்ப்பு உள்ளது, வலுசக்தி விலைகளுக்கும் இதுவே நடைபெறுகிறது என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickramasinghe) தெரிவித்துள்ளார்.