பெண் பிள்ளைகளின் திருமண வயதை 9 ஆகவும், ஆண் பிள்ளைகளின்; திருமண வயதை 15 ஆகவும் குறைக்கும் சர்ச்சைக்குரிய யோசனை ஒன்று, ஈராக் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இது மனித உரிமை அமைப்புகள் மற்றும் பெண்கள் அமைப்புகள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது, ஈராக்கில் திருமணம் செய்ய குறைந்தபட்சம் 18 வயது இருக்க வேண்டும் என்று சட்டம் கூறுகிறது.
இருப்பினும், ஈராக் நீதி அமைச்சகத்தால் முன்மொழியப்பட்ட புதிய சட்டம், குடும்ப விடயங்களுக்கு மத விதிகளை பின்பற்றலாமா? அல்லது சிவில் நீதிமன்ற முறையை பின்பற்றலாமா? என்பதை மக்கள் தேர்வு செய்ய அனுமதிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
எனினும் இந்த மாற்றம் வாரிசுரிமை, விவாகரத்து மற்றும் குழந்தைப் பாதுகாப்பு போன்ற விடயங்களில் பெண்களின் உரிமைகளைக் குறைக்கும் என்று விமர்சகர்கள் கூறுகின்றனர்.
இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டால், ஒன்பது வயதுடைய சிறுமிகளுக்கும், 15 வயதுடைய சிறுவர்களும் திருமணம் செய்து கொள்ளலாம்.
இளவயது திருமணம்
இளவயது திருமணத்தால் பெண்கள் பள்ளிப் படிப்பை இடைநிறுத்துவது, இளம் வயதிலேயே கர்ப்பம் தரிப்பது, குடும்ப வன்முறைக்கு ஆளாகும் அபாயம் அதிகமாகும் என்று மனித உரிமை ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இருப்பினும், இந்த யோசனையை ஆதரிப்பவர்கள், இது இஸ்லாமிய சட்டத்தை மேலும் சீரானதாக மாற்றும் என்றும் இளம் பெண்களை தகாத உறவுகளிலிருந்து பாதுகாக்கும் என்றும் கூறுகின்றனர்.
ஆனால் குறித்த ஆதரவாளர்கள், குழந்தை திருமணத்தின் ஆபத்துகளை கவனிக்கவில்லை என்று எதிர்ப்பாளர்கள் வாதிடுகின்றனர்.
இதற்கிடையில் யுனிசெஃப் கருத்துப்படி, ஈராக்கில் 28 சதவீத பெண்கள் 18 வயதுக்கு முன்பே திருமணம் செய்து கொள்கின்றனர்.