முல்லைத்தீவு கொக்குதொடுவாய் மனித புதைகுழி விவகாரம் தொடர்பாக பாரிய கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று செவ்வாய்க்கிழமை (20) இடம்பெற்றது.
இந்த போராட்டம் கொக்குதொடுவாய் மனித புதைகுழிக்கு முன்பாக முல்லைத்தீவு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தினரால் முன்னெடுக்கப்பட்டது.
புதைகுழியை சுற்றி கண்ணீர் விட்டு கதறி அழுத மக்கள்
கொக்குதொடுவாய் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழி அகழ்வவு பணியானது மூன்று கட்டமாக இடம்பெற்று 52 மனித எச்சங்கள் அகழ்ந்தெடுக்கப்பட்ட நிலையில் மூடப்பட்டுள்ளது.
குறித்த அகழ்வு பணியின் போது கண்டுபிடிக்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பான எவ்வித உண்மைகளும் இதுவரை வெளிக்கொண்டுவரப்படவில்லை.
இந்நிலையில் கொக்குதொடுவாய் மனித புதைகுழி விடயத்தை மூடி மறைக்க வேண்டாம், எமக்கு உண்மையும் நீதியும் வேண்டும் என கூறி குறித்த போராட்டம் இடம்பெற்றிருந்தது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் மனிதபுதைகுழி கடந்த ஆண்டு 2023.06.29 ஆம் திகதி இனம்காணப்பட்ட நிலையில் மூன்று கட்டங்களாக அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு இதுவரை 52 மனித எச்சங்கள் மீட்கப்பட்ட நிலையில் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
இரண்டு கட்டங்களின் போது 40 மனித எச்சங்கள் மீட்கப்பட்ட நிலையில் மூன்றாம் கட்ட அகழ்வு கடந்த 04.07.2024 அன்று ஆரம்பமாகி 15.07.2024 வரை இடம்பெற்று 12 மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளது.
அது தொடர்பிலான தகவல்களின் உண்மைத்தன்மை வெளிப்படுத்தப்படவில்லை. போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மனிதபுதைகுழியை சுற்றி கண்ணீர் விட்டு கதறி அழுததுடன் , தமக்கான நீதியையும் வேண்டி நின்றனர்.
இன்று இடம்பெற்ற போராட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன்,முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன்,வடக்கு மாவட்டங்களை சேர்ந்த முல்லைதீவு, கிளிநொச்சி, வவுனியா, மன்னார், யாழ்பாணம் காணாமல் போனவர்களின் உறவினர்கள் சங்க உறுப்பினர்கள், பொதுமக்கள், சமூக செயற்பாட்டாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.