இன்னும் ஐந்து வருடங்களுக்கு நாட்டின் அதிகாரத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு(Ranil Wickremesinghe) வழங்க இந்த நாட்டின் புத்திசாலித் தனமான மக்கள் தீர்மானித்துள்ளனர் என்று நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா(Nimal Lanza) தெரிவித்துள்ளார்.
நீர்கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
துரத்தப்பட்ட கோட்டாபய
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
நாம் தலைமை வகித்த அனைத்து விடயங்களையும் வென்றெடுத்துள்ளோம். மக்களுடன் களத்தில் இருப்பவர்களை அரசியலில் முன்னோக்கிக் கொண்டு வர வேண்டும். மக்களுக்கு உதவாதவர்களைக் கொண்டு வருவதன் மூலம் மக்களும் நாடும் பின்னோக்கி செல்லும்.
கிராமத்தையும், நகரத்தையும், நாட்டையும் யாரால் கட்டியெழுப்ப முடியும், ரணிலைத் தவிர வேறு எவராலும் இந்த நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது. கோட்டாபய ராஜபக்சவை அழைத்து வந்தபோதும் அவரை அழைத்து வர வேண்டாம் என்று கூறினோம். எனினும் அவர் தேர்தலில் களமிறக்கப்பட்டதால் அவருக்காக நாமும் வேலை செய்தோம். ஆனால் இறுதியாக அவர் மக்களால் துரத்தப்பட்டார்.
எனவே இந்த நாட்டை யாரால் கட்டியெழுப்ப முடியும் என்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டும். சஜித் பிரேமதாசவால் அதனை செய்ய முடியுமா? அவருடன் நெருங்கிப் பழகுபவர்களின் கதைகளைக் கேட்கும்போதும், அவர் எப்படி அமைச்சைக் கையாண்டார் என்பதைப் பார்க்கும்போதும், அவரால் நாட்டை நிர்வகிக்க முடியாது என்பது புரியும்.
வேலை செய்யாதவர்கள், தொழில் தொடங்காதவர்கள், அனுபவம் இல்லாதவர்கள் ஒரு நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது.
ரணிலின் சாதனை
இந்நாட்டின் நிலைமைக்கு ஏற்ப சர்வதேச சமூகத்துடன் தொடர்பு வைத்திருக்கும் ரணில் விக்ரமசிங்கவை தவிர வேறு யாராலும் இந்த நாட்டை காப்பாற்ற முடியாது. அதனால்தான் நாடாளுமன்றத்தில் அதிக எண்ணிக்கையிலான எம்.பி.க்கள் அவருடன் இணைந்துள்ளனர். இரண்டு வருடங்களில் ரணில் விக்ரமசிங்க சாதனை புரிந்துள்ளதாக முழு உலகமும் கூறுகின்றது.
நாமல் ராஜபக்சவின் அரசியலால்தான் ஆர்ப்பாட்டத்தின் மீது தாக்குதல்களை மேற்கொள்ளச் சென்று அதன் விளைவாக முழு நாடும் தீப்பற்றியது. இவ்வாறு நாட்டை வீழ்த்தி, பொருளாதாரத்தை சீரழித்த பின் தற்போது மக்களிடம் வாக்கு கேட்டு வருகின்றனர்.
கடந்த காலங்களில் ஜனாதிபதி கோட்டாபய, பிரதமர் மகிந்த, நிதியமைச்சர் பசில், அமைச்சரவை அமைச்சர் நாமல் மற்றும் ஏனைய அமைச்சரவை அமைச்சர் சமல் ராஜபக்ச ஆகியோர் நாட்டை முறையாக ஆட்சி செய்திருக்க வேண்டும். இவர்களது செயற்பாடுகளால் எமது 30 வருட அரசியல் கேள்விக்குறியாகிவிட்டது.
நாடு தற்போது பயணிக்கும் பாதையில் தொடர்ந்தும் முன்னோக்கிச் சென்றால் விரைவில் அபிவிருத்தியடையலாம். ரணில் விக்ரமசிங்க பற்றி நாட்டு மக்கள் இப்போது பேசுகிறார்கள். நாடு இப்படித்தான் போக வேண்டும் இல்லையேல் இந்த நாடு பங்களாதேஷ் போல் ஆகிவிடும்.
மக்கள் அதைப் புரிந்துகொள்கிறார்கள். ரணில் விக்ரமசிங்கவை வெற்றிபெறச் செய்வதற்காக நாடாளுமன்றத்தில் அதிக எண்ணிக்கையிலான அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன. நாடாளுமன்றத்தில் அதிக எண்ணிக்கையிலான எம்.பி.க்கள் ஒன்றாக உள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.