வவுனியா குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் முன்பாக ஆறு நாட்களுக்கு மேல் அடிப்படை வசதியின்றி வீதி ஓரத்தில் இரவு பகலாக காத்திருக்கவேண்டிய நிலையை ஏற்படுத்திய அரசாங்கத்துக்கு வாக்களிக்க வேண்டுமா என கடவுச்சீட்டுக்காக காத்திருக்கும் மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
வாக்களிக்க வேண்டுமா?
வவுனியா திணைக்களத்தின் ஊடாக ஒரு நாளைக்கு 25 நபர்களுக்கும், ஒருநாள் சேவையின் கீழ் 25 நபர்களுக்கும், ஏற்கனவே சாதாரண சேவையின் கீழ் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பித்து குறிப்பிட்ட காலம் முடிவடைந்ததும் கடவுச்சீட்டினை பெறாதவர்கள் 10 நபர்கள் என ஒரு நாளைக்கு 60 நபர்களுக்கு வவுனியா பிராந்திய குடிவரவு குடியகல்வு திணைக்களத்தினால் கடவுச்சீட்டுக்கள் வழங்கப்படுகின்றன.
ஒருநாள் சேவையின் கீழ் கடவுச்சீட்டினை பெறுபவர்களில் முக்கிய தேவையுடையவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையிலும் கடவுச்சீட்டு விநியோகிக்கப்படுகின்றன.
இந்நிலையில், வவுனியா பிராந்திய குடிவரவு குடியகல்வு திணைக்களத்துக்கு முன்பாக கடந்த ஆறு நாட்களாக வரிசையில் 600க்கும் மேற்பட்ட மக்கள் காத்திருக்கின்றனர்.
அதேவேளை கொழும்பிலும் கடவுச்சீட்டினை பெறுவதற்கு மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.