அனுராதபுரம் – கெக்கிராவை கல்வி வலயத்திற்குட்பட்ட பிரபல பாடசாலை ஒன்றில் மாணவர்களால் பாடசாலை வளாகத்துள் போதைப்பொருள் மறைத்து வைத்த சம்பவம் அம்பலமாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த பாடசாலை மாணவர்கள் சிலர் பல்வேறு வகையான சட்டவிரோத மது மற்றும் போதைப்பொருட்களை பாடசாலைகளுக்கு கொண்டு வந்து, மற்ற மாணவர்களுக்கு வழங்கும் நோக்கத்தில் பல்வேறு இடங்களில் மறைத்து வைக்கின்றனர்.
பெற்றோர்கள் பொலிஸில் முறைப்பாடு
இதுதொடர்பில் தெரிய வந்ததை அடுத்து பாடசாலை அதிபர், ஒழுக்காற்று ஆசிரியர் மற்றும் ஏனைய ஆசிரியர்கள் மாணவர்களை எச்சரித்துள்ளனர்.
எனினும் , ஆசிரியர்கள் மாணவர்களை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் துன்புறுத்தியதாகவும், மாணவர்களை மருத்துவமனையில் சேர்த்ததாகவும் பெற்றோர்கள் பொலிஸில் முறைப்பாடு அளித்தனர்.
பாடசாலைக்குள் போதைப்பொருள் கொண்டுவந்து பாடசாலையில் பயன்படுத்திய மாணவர்கள் தொடர்பில் அதிபர் மற்றும் ஆசிரியர்கள் பொலிஸில் முறைப்பாடு செய்த போதிலும் பொலிஸார் இது தொடர்பில் மௌனம் காத்ததாக பாடசாலை தரப்பு குற்றம் சுமத்தியுள்ளனர்.
அதேசமயம் மாணவர்களை தண்டித்ததற்காக பாடசாலை அதிபர் உட்பட பல ஆசிரியர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவும் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இச்சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து அண்மையில் பாடசாலையின் ஆசிரியர் ஊழியர்கள் பாடசாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றை நடாத்தி, அது தொடர்பில் உயர்மட்ட அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு சென்றுள்ளனர்.
இந்நிலையில் பாடசாலை மாணவர்கள் எவ்வித அச்சமும் இன்றி பாடசாலையில் போதைப்பொருளுக்கு அடிமையாகி வருகின்ற சம்பவம் அம்பலத்திற்கு வந்துள்ளது.