கப்பல் ஒன்று உள்ளூர் மீன்பிடி இழுவை படகு மீது மோதி விபத்துக்குள்ளானதில் மூன்று மீனவர்கள் காணாமல் போயுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, கடந்த மாதம் 25 ஆம் திகதி ‘நிஹதமணி 01’ என்ற உள்ளூர் மீன்பிடி இழுவை படகில் 07 மீனவர்கள் காலி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன் பிடிக்கச் சென்றுள்ளனர்.
இந்நிலையில், இன்று செவ்வாய்க்கிழமை (03) காலை இழுவை படகை அவ்வழியாக சென்ற கப்பல் மோதி விபத்துக்குள்ளாக்கியுள்ளது.
இதன்போது, கவிழ்ந்த படகில் இருந்த மூன்று மீனவர்கள் காணாமல் போயுள்ளனர். மேலும் 04 மீனவர்கள் லசந்த 01 என்ற மீன்பிடி இழுவை படகினால் மீட்கப்பட்டுள்ளனர்.
மீட்கப்பட்ட மீனவர்கள் கரைக்கு கொண்டு வரப்படுவதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில், மீட்கப்பட்ட மீனவர்களில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவின் பணிப்புரையின் பேரில், ‘லசந்த 01’ என்ற மீன்பிடி இழுவை படகு மூலம் கொண்டு வரப்பட்ட மீனவர்களை மீட்பதற்காக கடற்படையினர் இலங்கை கடற்படையின் SLNS கஜபாகு கப்பலை அனுப்பி வைத்துள்ளனர்.
இதேவேளை, நிஹாதமணி 01 மீன்பிடி இழுவை படகு கவிழ்ந்ததற்கு காரணமான வெளிநாட்டுக் கப்பலை அடையாளம் கண்டு அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு கொழும்பு கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தின் உதவியுடன் வணிகக் கப்பல் செயலகம் முயற்சிகளை ஒருங்கிணைத்து வருவதாக கடற்படை மேலும் தெரிவித்துள்ளது.