உத்தியோகபூர்வ தகவல்கள் மற்றும் ஆவணங்களை வெளியிடுவதைத் தடுக்க அனைத்து அரசாங்க ஊழியர்களும் அனுமதியின்றி சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்து பாகிஸ்தான் (Pakistan) அரசாங்கம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதன்படி, 1964 ஆம் ஆண்டு அரசு ஊழியர்கள் (நடத்தை) விதிமுறைகளின் கீழ், அரசு ஊழியர்கள் அறிவுறுத்தல்களைப் பின்பற்ற வேண்டும் என்று நாட்டின் அரசு நிறுவனங்களால் வெளியிடப்பட்ட அறிக்கைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவின்படி, அரசு ஊழியர்கள் அனுமதியின்றி எந்த சமூக வலைத்தளத்தையும் பயன்படுத்த அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன
அதன்படி, “அரசாங்கத்தின் நற்பெயரை பாதிக்கும் கருத்துகளையோ, உண்மைகளையோ தெரிவிக்க அரசு ஊழியர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்” என்றும், கொள்கைகள், முடிவுகள், தேசியத்திற்கு எதிராக பேசக்கூடாது என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதேவேளை, பாகிஸ்தானிய அரசு ஊழியர்கள் தங்களது கருத்துக்களையோ அரசியல் கருத்துக்களையோ சமூக ஊடக தளங்களில் அனுமதியின்றி பரப்ப முடியாது என்றும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.