இலங்கையில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு, 80 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக பிரதி அஞ்சல்மா அதிபர் ராஜித கே.ரணசிங்க தெரிவித்துள்ளார்.
இதெவேளை, உத்தியோகபூர்வமாக தேர்தல் துண்டுப் பிரசுரங்களை விநியோகிக்கும் பணி 30 சதவீதம் நிறைவடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு, 3 நாளாக இன்றும் இடம்பெற்றது.
இதன்படி, இன்றையதினம் (06-09-2024) சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயம், சிரேஷ்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயம், உதவி காவல்துறை அத்தியட்சகர் காரியாலயம், பொலிஸ் நிலையங்கள், விசேட அதிரடிப்படை முகாம்கள் மற்றும் விசேட பொலிஸ் பிரிவுகள் என்பனவற்றிலும் அஞ்சல் மூல வாக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தன.
மேலும், அஞ்சல் மூல வாக்குகளை செலுத்த முடியாதவர்களுக்கு எதிர்வரும் 11ஆம் மற்றும் 12ம் திகதிகள் மேலதிக தினங்களாக ஒதுக்கப்பட்டுள்ளன.
11ஆம் மற்றும் 12ஆம் திகதிகளில் வாக்களிப்பவர்கள் தாங்கள் கடமையாற்றும் மாவட்டங்களின் மாவட்ட செயலகங்களில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள விசேட வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிக்க வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.