2019ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு ஜனாதிபதி தேர்தலுடன் தொடர்புடைய வன்முறைகள் 43 வீதத்தினால் குறைவடைந்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு (Election Commission) தெரிவித்துள்ளது.
அதன்படி ஜூலை 31ஆம் திகதி முதல் செப்டெம்பர் ஐந்தாம் திகதி வரை 2460 தேர்தல் வன்முறைகள் பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீரத்நாயக்க (Saman Ratnayake) குறிப்பிட்டுள்ளார்.
இவற்றில் 2387 முறைப்பாடுகள் தேர்தல் சட்ட மீறல்கள் என்ற வகைக்குள் அடங்குவதாகவும் 11 முறைப்பாடுகளை மாத்திரம் வன்முறைகள் என குறிப்பிடலாம் என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
இந்த எண்ணிக்கை 2019ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது தேர்தல் வன்முறைகள் 43.7 வீதம் வீழ்ச்சியடைந்துள்ளதை வெளிப்படுத்துகின்றது. 2019 இல் தேர்தல் சட்டமீறல்கள் 4234 ஆக பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில் இந்த ஆண்டு இதுவரை 2387 ஆக பதிவாகியுள்ளன.
அத்துடன் தேர்தல் வன்முறைகள் குறிப்பிடத்தக்க அளவு குறைவடைந்துள்ளன. அதாவது இதுவரை 11 சம்பவங்கள் மாத்திரம் பதிவாகியுள்ள நிலையில் 2019 இல் 34 சம்பவங்கள் பதிவாகியதாக தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.