நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலிலே வாக்களிக்க வாக்கெடுப்பு நிலையத்திற்கு செல்லும்போது ஆளடையாளத்தை உறுதிப்படுத்தும் தேவைப்பாடு கருதி தேர்தல்கள் ஆணைக்குழு (Election Commision) அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி, வாக்காளர்கள் அனைவரும் வாக்களிப்பதற்காக தமக்குரிய வாக்கெடுப்பு நிலையத்திற்கு செல்லும் போது, பின்வரும் ஆளடையாள ஆவணங்களில் ஒன்றை எடுத்துச்செல்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
அத்துடன், வாக்கெடுப்பு நிலையத்தில் உள்ள அலுவலர்களுக்கு பரீட்சிப்பதற்கு அதனைச் சமர்ப்பிப்பது அவசியமாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், செல்லுபடியாகும் ஆளடையாள ஆவணங்களாக,
1. ஆட்களைப்பதிவு செய்யும் திணைக்களத்தினால் விநியோகிக்கப்பட்டுள்ள தேசிய அடையாள அட்டை
2. செல்லுபடியான கடவுச்சீட்டு
3. செல்லுபடியான சாரதி அனுமதிப்பத்திரம்
4. அரச சேவை ஓய்வூதியர் அடையாள அட்டை (ஓய்வூதியத் திணைக்களத்தினால் விநியோகிக்கப்பட்டது)
5. முதியோர் அடையாள அட்டை (பிரதேச செயலகத்தினால் விநியோகிக்கப்பட்டது)
6. ஆட்களைப்பதிவுசெய்யும் திணைக்களத்தினால் விநியோகிக்கப்படும் வணக்கத்திற்குரியவர்களுக்கான/ மதகுருமார்களுக்கான அடையாள அட்டை
7. ஆட்களைப் பதிவுசெய்யும் திணைக்களத்தினால் விநியோகிக்கப்படும் தேசிய அடையாள அட்டைத் தகவல்களை உறுதிப்படுத்தும் கடிதம்
8. தேர்தல் ஆணைக்குழுவினால் விநியோகிக்கப்படும் தற்காலிக அடையாள அட்டை
9. வலிமையிழந்த ஆட்களுக்கு தேர்தல் ஆணைக்குழுவினால் விநியோகிக்கப்படும் தற்காலிக அடையாள அட்டை போன்றனவாகும்.
மேற்படி அடையாள அட்டைகளில் ஏதேனுமொன்றைச் சமர்ப்பிக்கத் தவறும் பட்சத்தில், வாக்கெடுப்பு நிலையத்தில் வாக்குச் சீட்டொன்று விநியோகிக்கப்பட மாட்டாது என்றும் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்தள்ளது.