கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்குள் புகைப்படம் எடுத்த தம்பதியினர் எந்த குற்றமும் செய்யவில்லை எனவும், அவர்களுக்கு எதிராக வழக்குத் தொடர முடியாது எனவும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக கண்டி பிரதேசத்தின் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
புகைப்படம் எடுத்த அன்று காலை இருவரும் திருமணம் செய்து கொண்டு தலதா மாளிகையில் வழிபாடு செய்ய வந்ததாகவும், அந்த நேரத்தில் புகைப்படங்கள் எடுக்கப்பட்டதாகவும், இதுபோன்ற புகைப்படங்களை உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் பலர் எடுத்துள்ளதாகவும், சட்டப்படி குற்றம் இல்லை என்றும் அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் பேஸ்புக் மற்றும் சமூக வலைதளங்கள் மூலம் மேற்கொள்ளப்படும் பரப்புரைகள் அவதூறானவை என்றும், இது தொடர்பாக கிடைத்த முறைப்பாட்டின் படி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து அது தொடர்பான பி அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
உள்ளக விசாரணை
ஸ்ரீ தலதா மாளிகையின் தியவதன நிலமே பிரதீப் நிலங்க தேலவும் இந்த புகைப்படம் எடுக்க அனுமதித்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பில் தியவதன நிலமேவிடம் வினவிய போது, இவ்வாறான சம்பவங்களுக்கு இடமளிக்கவே முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு கமராக்கள் மூலம் மேற்கொள்ளப்பட்ட அவதானிப்புகளில், தலதா மாளிகையில் மக்கள் வழிபாடுகளில் ஈடுபடும் சாதாரண நேரத்தில் தம்பதிகள் வந்து புகைப்படம் எடுத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
எவ்வாறாயினும், இது தொடர்பில் உள்ளக விசாரணை நடத்தப்படும் என தியவதன நிலமே தெரிவித்துள்ளார்.