நடைபெற்று முடிந்து தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் முதலாம் வினாத்தாளை இரத்து செய்வது தொடர்பில் இதுவரை எந்தவித தீர்மானமும் எடுக்கப்படவில்லை எனப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த விடயம் தொடர்பில் உரிய விசாரணை முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் வினாத்தாள் வட்ஸ்அப் மூலம் ஆசிரியர் ஒருவரால் பகிரப்பட்டதாகப் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களினால் முன்னதாக குற்றஞ்சாட்டப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, குறித்த வினாத்தாளைத் தயாரித்த பரீட்சை சபையுடன் நடத்திய கலந்துரையாடலின் பின்னர் கருத்துரைத்த பரீட்சைகள் ஆணையாளர் நாயகம், 3 வினாக்களை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்திருந்தார்.
இதனை தொடர்ந்து, தமது பிள்ளைகளுக்கு அநீதி இழைக்கப்படுவதாகத் தெரிவித்து சில பெற்றோர்கள் பரீட்சைகள் திணைக்களத்திற்கு முன்பாக நேற்று (19) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது, அண்மையில் இடம்பெற்ற தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையினை இரத்து செய்யுமாறும் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த பின்னணியிலேயே, குறித்த விடயம் தொடர்பில் கலந்துரையாடுவதற்குப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பெற்றோர்களுக்குப் பரீட்சைகள் ஆணையாளரினால் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பின் பின்னர், செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட பரீட்சைகள் ஆணையாளர் நாயகம், குறித்த பரீட்சை தொடர்புடைய பல வினாக்கள் வெளியானதாக மாணவர்களின் பெற்றோர் தமது கவனத்திற்கு கொண்டு வந்ததாக குறிப்பிட்டார்.
இந்தநிலையில், உரிய விசாரணைகளை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.