திருப்பதி வெங்கடாசலபதி கோவிலில் வழங்கப்படும் லட்டு பிரசாதமானது விலங்கு கொழுப்பு கலந்த நெய்யினால் தயாரிக்கப்படுகிறது என்ற சர்ச்சையை தொடர்ந்து திருப்பதி லட்டில் குட்கா புகையிலை பொருட்கள் இருப்பதாக பக்தர் ஒருவர் வெளியிட்டுள்ள காணொளி மீண்டுமொரு சர்ச்சை தோற்றுவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மறுக்கப்பட்ட குற்றச்சாட்டு
தெலங்கானா மாநிலம், கம்மம் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் கடந்த செப்டம்பர் மாதம் 19 ஆம் திகதி திருப்பதி கோவிலுக்குச் சென்றுள்ளார்.
இதன்போது, உறவினர்களுக்குக் கொடுப்பதற்காக அங்கிருந்து வாங்கி வந்த லட்டு பிரசாதத்தை உறவினர்களுக்கு எடுத்துக் கொடுக்கும்போது பிரசாதத்தில் குட்கா புகையிலை பொருட்கள் காணப்படுவதாக வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில், இந்த குற்றச்சாட்டைத் திருப்பதி தேவஸ்தானம் முற்றிலுமாக மறுத்துள்ளதுடன் இது போன்ற உண்மைக்கு புறம்பான தகவல்களைப் பரப்ப வேண்டாம் என்று கோரிக்கை விடுத்துள்ளது.
வழக்கம் போல் லட்டு விற்பனை
இதேவேளை, திருப்பதி கோவிலில் கடந்த ஆட்சியின் போது விலங்குகள் கொழுப்பு கலந்த நெய்யில் லட்டுகள் தயாரிக்கப்பட்டதாக எழுந்த சர்ச்சையினால் ஏழுமலையான் கோவிலில் நேற்று முன்தினம்(23) மகா சாந்தியாகம் நடத்தப்பட்டு கோவில் முழுவதும் புனித நீர் தெளிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து, லட்டு மீதான தோஷம் நீங்கியதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளதுடன் பக்தர்கள் எந்தவித சந்தேகமும் இல்லாமல் வழக்கம் போல் லட்டு பிரசாதம் வாங்கிச் செல்லலாம் என தெரிவித்துள்ளனர்.
எனினும், லட்டு சர்ச்சை பரபரப்பை ஏற்படுத்தினாலும் திருப்பதிக்கு வரும் பக்தர்கள் எந்தவித தயக்கமும் இன்றி லட்டு கவுண்டர்களில் வழக்கம் போல் வரிசையில் நின்று ஆர்வமுடன் லட்டுளை வாங்கிச் செல்வதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், கடந்த 19ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரை சுமார் 14 லட்சம் திருப்பதி லட்டுகள் விற்பனையாகியுள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும், செப்டம்பர் 19ஆம் திகதியன்று மொத்தம் 3.59 லட்சம் லட்டுகளும் செப்டம்பர் 20 ஆம் திகதியன்று 3.17 லட்சம் லட்டுகளும், செப்டம்பர் 21 ஆம் திகதியன்று 3.67 லட்சம் லட்டுகளும், செப்டம்பர் 22 ஆம் திகதியன்று 3.60 லட்சம் லட்டுகளும் விற்பனையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதுமாத்திரமின்றி, நாளொன்றுக்கு சராசரியாக 3.50 லட்சம் லட்டுகள் விற்பனையாகின்றமை குறிப்பிடத்தக்கது.