ஈழத்தமிழ் மக்களுக்காக தன்னுயிரை ஆகுதியாக்கிய தியாக தீபம் திலீபனின் 37ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று (26) தமிழர் தாயகமான வடக்கு – கிழக்கிலும், புலம்பெயர் தேசங்களிலும் கடைப்பிடிக்கப்படவுள்ளது.
பிரதான நினைவேந்தல் நிகழ்வு யாழ். நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபன் நினைவுத்தூபியில் இன்று முற்பகல் 10.48 மணிக்கு ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு, தொடர்ந்து அஞ்சலி நிகழ்வுகள் நடைபெறும்.
நல்லூர் வீதியில் உண்ணாவிரதம் இருந்த பார்த்தீபன்
அத்துடன் யாழ். பல்கலைக்கழகம், தீவகம், கிழக்கு மாகாணம் உட்பட வடக்கு, கிழக்கின் பல இடங்களிலும் புலம்பெயர் தேசங்களிலும் திலீபனை நினைவேந்தும் நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.
இராசையா பார்த்தீபன் என்ற இயற்பெயரை கொண்ட திலீபன் 1963ஆம் ஆண்டு நவம்பர் 29ஆம் திகதி யாழ்ப்பாணம் – ஊரெழுவில் பிறந்தவர். தமிழ் மக்களின் உரிமைப் போராட்டம் தீவிரமடைந்தபோது தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைந்தார்.
தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் அரசியல்துறைப் பொறுப்பாளராக இருந்த அவர், இந்திய அமைதிப் படை நாட்டில் நிலைகொண்டிருந்தபோது, மீளக்குடியமர்தல் என்ற பெயரில் வடக்கிலும், கிழக்கிலும் புதிதாகத் திட்டமிடும் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்த வேண்டும்,
சிறைக் கூடங்களிலும் இராணுவ – பொலிஸ் தடுப்பு முகாம்களிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் யாவரும் விடுதலை செய்யப்பட வேண்டும்,
அவசரகாலச் சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும், ஊர்காவல் படையினருக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் முற்றாகக் களையப்படவேண்டும்,
தமிழர் பிரதேசங்களில் புதிதாகப் பொலிஸ் நிலையங்களைத் திறப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தப்படவேண்டும் என 5 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதமிருந்தார்.
நல்லூர் வீதியில் 1987ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 15ஆம் திகதி உணவு – நீரைத் தவிர்த்து உண்ணாவிரதத்தை ஆரம்பித்தார். அவரது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத நிலையில் 1987ஆம் ஆண்டு செப்டெம்பர் 26ஆம் திகதி முற்பகல் 10.48 மணிக்கு அவர் உயிர்நீத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.