இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் வழங்குவதை பிரான்ஸ் நிறுத்தியதாகவும் மற்ற நாடுகளும் ஆயுத விநியோகத்தை நிறுத்த வேண்டும் என்றும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் தெரிவித்துள்ளார்
காஸாவில் இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவததைத் தொடர்ந்து அரசியல் ரீதியாக இதற்கு தீர்வு காண்பதற்காக இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் வழங்குவதை நிறுத்தியதாகவும், போரை நிறுத்த மற்ற நாடுகளும் இதனை முன்னெடுக்க வேண்டும் என பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் தெரிவித்துள்ளார்.
பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சகத்தின் அறிக்கையின்படி கடந்தாண்டு மட்டும் 30 மில்லியன் யூரோக்கள் மதிப்பில் ஆயுதங்களை இஸ்ரேலுக்கு பிரான்ஸ் வழங்கியுள்ளது. ஆனால், இஸ்ரேலும் அதிகளவில் ஆயுதங்கள் வழங்கும் முதன்மை நாடாக பிரான்ஸ் இருந்ததில்லை.
”இன்றைய அரசியல் ரீதியான தீர்வுக்கு என்ன தேவை என்றால் காஸாவில் நடத்தப்படும் போருக்குத் தேவையான ஆயுதங்கள் வழங்குவது நிறுத்தப்பட வேண்டும். பிரான்ஸ் இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் எதையும் வழங்காது.
”போர் மேலும் நடப்பதைத் தடுப்பதே இப்போது எங்களின் எண்ணம். லெபனான் நாட்டு மக்கள் தியாகத்திற்கு முன்வரக் கூடாது. லெபனான் மற்றோரு காஸாவாக மாறக்கூடாது” என அதிபர் மேக்ரான் இன்று பேசியுள்ளார்.
பிரான்ஸ் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜீன் நோயல் பாரட் 4 நாள்கள் அரசு பயணமாக மத்தியக் கிழக்கு நாடுகளுக்குச் சென்றுள்ளார். வருகிற திங்களன்று (அக். 7) இஸ்ரேல் சென்று தனது பயணத்தை அவர் முடிக்கவுள்ளதால் பிரான்ஸ் அதிபரின் இந்த அறிவிப்பு அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது