நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஓய்வூதியம் பெறும் வகையில் விரிவான சமூக பாதுகாப்பு வேலைத்திட்டம் உருவாக்கப்படும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
தேசிய முதியோர் தினத்தை முன்னிட்டு அவர் விடுத்துள்ள விசேட செய்தியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அதில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
அக்டோபர் 8 ஆம் திகதி தேசிய ஓய்வூதிய தினத்தை முன்னிட்டு நாட்டின் உயிர்நாடியாக விளங்கும் தொழிலாளர்களின் ஒரு பகுதியாக இருந்து அரசுப் பணி ஆற்றிய பங்களிப்பை நினைவுகூரும் வகையில் ஓய்வுபெற்ற மூத்த குடிமக்கள் தினம் கொண்டாடப்படுகிறது.
‘தேசிய ஓய்வூதிய தினம்’ என்பது அவர்களின் பல தசாப்தகால சேவைக்கான அடையாள அஞ்சலியாகும். பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் வலிமையான குடிமகனாக மட்டுமல்லாமல், ஆரோக்கியமான, ஆன்மீக ரீதியில் முழுமையான, மேம்பட்ட கலாச்சார குடிமகனாக ஓய்வு பெற்ற மூத்த குடிமகனாக வாழ்வதற்கு வளமான நாட்டையும், அழகான வாழ்க்கையையும் உங்களுக்காக உருவாக்குவதே எங்கள் நோக்கம்.
பாதுகாப்பான சமுதாயம் மற்றும் வளமான தேசம் என்ற பார்வையுடன் புதிய அரசாங்கத்தின் கொள்கைகளில், தேசிய ஓய்வூதியக் கொள்கைகள், முறையான மற்றும் முறைசாரா துறைகளின் பங்களிப்புடன் அனைவருக்கும் நிலையான மற்றும் தொடர்ந்து ஓய்வூதியம் வழங்கும் விரிவான கொள்கையின் தற்போதைய நிறுவன கட்டமைப்பிற்குள் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்படும்.
இதுவரை, ஓய்வு பெற்றவர்களின் கூட்டு எண்ணிக்கை 720,000ஐ தாண்டியுள்ளது. அவர்களுக்காக 2024ஆம் ஆண்டில் அரசு ரூ. 434 பில்லியனுக்கும் அதிகமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு இலங்கை குடிமகனின் அன்றாட வாழ்க்கையை ஆன்மீகம், சமூகம் மற்றும் பொருளாதாரம் என அனைத்து அம்சங்களிலும் மேம்படுத்துவதே எங்கள் நோக்கம். அந்த இலக்கை மனதில் கொண்டு, ஒவ்வொரு குடிமகனும் ஓய்வூதியம் பெறுவதற்கு உரிமையுள்ள ஒரு விரிவான சமூகப் பாதுகாப்புத் திட்டத்தை உருவாக்குவதில் நீங்கள் சந்தேகத்திற்கு இடமின்றி ஒரு பகுதியாக இருப்பீர்கள்.
பொதுச் சேவையில் பல வருட அனுபவம், நடைமுறை மற்றும் வாழ்நாள் முழுவதும் உள்ள நல்ல மனப்பான்மைகளை நாட்டின் அடுத்த தலைமுறைக்குக் கடத்துவதன் மூலம், நீங்கள் ஒரு சுறுசுறுப்பான குடிமகனாக சமூக முன்னேற்றத்திற்கு பங்களிப்பதைக் காண விரும்புகிறோம் எனவும் பிரதமர் ஹரிணி அமரசூரிய குறிப்பிட்டுள்ளார்.