யாழ்ப்பாணம் – திருநெல்வேலியில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிவந்த பால் தொழிற்சாலை ஒன்றுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி பொது சுகாதார பரிசோதகர் பா. சஞ்சீவன் தலைமையிலான குழுவினரால் திருநெல்வேலி “பால் தொழிற்சாலை” கடந்த 08.08.2024 தினம் பரிசோதித்த போது சுகாதார சீர்கேட்டுடன் இயங்குவது அவதானிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து பொது சுகாதார பரிசோதகரால் இனங்காணப்பட்ட சுமார் 30ற்கும் மேற்பட்ட குறைபாடுகள் நிவர்த்தி செய்வதற்கு எழுத்து மூலமான அறிவித்தல் வழங்கப்பட்டது.
இவ் அறிவித்தல் பால் தொழிற்சாலை தலைவர், முகாமையாளர் மற்றும் பணிப்பாளர் சபையினருக்கு உரிய தெளிவுபடுத்தல்களுடன் வழங்கப்பட்டது.
இதன்போது 2 மாதங்கள் கடந்த நிலையிலும் குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்படாமை அவதானிக்கப்பட்டதை அடுத்து இன்று (14) திகதி யாழ்ப்பாண மேலதிக நீதவான் நீதிமன்றில் பால் தொழிற்சாலை முகாமையாளரிற்கு எதிராக பா. சஞ்சீவனால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
வழக்கினை இன்றையதினமே (14-10-2024) விசாரணைக்கு எடுத்துக்கொண்ட மேலதிக நீதவான் எஸ். லெனின்குமார், பொது சுகாதார பரிசோதகர் பா. சஞ்சீவனால் நீதிமன்றில் மேற்கொள்ளப்பட்ட சமர்ப்பணத்தினை கருத்தில்கொண்டு குறித்த தொழிற்சாலையினை சீல் வைத்து மூடுமாறு பணிப்புரை விடுத்தார்.
மேலும், 70,000/= தண்டப்பணமும் விதித்ததுடன், திருத்த வேலைகள் முடிந்தவுடன் பொது சுகாதார பரிசோதகரினை நீதிமன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
இதனையடுத்து திருநெல்வேலி பொது சுகாதார பரிசோதகர் பா.சஞ்சீவனால் பால் தொழிற்சாலை சீல் வைத்து மூடப்பட்டுள்ளது.