ஜேர்மனியில் உள்ள புலம்பெயர்ந்தோர், அந்நாட்டு மக்களுடன் ஒருங்கிணைந்து வாழ்வதற்கு மொழி ஒரு தடையாக இருப்பதாக இலங்கையிலிருந்து ஜேர்மனிக்கு புலம்பெயர்ந்த பணியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் பேருந்து ஓட்டுவதற்கு முறையாக பயிற்சி பெற்ற டுலாஜ் மதுசான் என்ற 29 வயதுடைய இளைஞரே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையிலிருந்து ஜேர்மனிக்கு புலம்பெயர்ந்த இவர், அந்நாட்டு பெண் ஒருவரை திருமணம் செய்து கொண்டதைத் தொடர்ந்து, அங்கு 10 ஆண்டுகள் வரையான குடியிருப்பு அனுமதியை பெற்றுள்ளார்.
ஜேர்மனிக்கு சென்ற சில நாட்களில் தொழிற்பயிற்சியையும் மொழிப்பயிற்சியையும் ஒரே நேரத்தில் மேற்கொள்ள வேண்டியிருந்ததால் மதுசான் கடுமையான மன அழுத்தத்தை எதிர்கொண்டுள்ளார்.
பெர்லினில் அமைந்துள்ள போக்குவரத்து அலுவலகத்துக்குச் சென்று இந்த பயிற்சிகள் குறித்து விசாரிக்கும் போது, மதுசானின் சுய விபரங்களை ‘BVG’ வேலைவாய்ப்பு இணையதளத்தில் பதிவிடுமாறு அவருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எனினும், இணையத்தளம் முழுவதும், ஜேர்மன் மொழியில் காணப்பட்டதால் வெறுப்படைந்த அவர், அமேசான் பொருட்கள் பிரிக்கும் மையம் ஒன்றில் வேலைக்கு சேர்ந்துள்ளார்.
எனவே, ஜேர்மனியில் வேலை வாய்ப்புகள் இருந்தாலும் மொழிப்பிரச்சினை அதற்கு தடையாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.