இலங்கை மின்சார சபையின் பொறுப்பற்ற நடவடிக்கையினால் ஒக்டோபர் முதலாம் திகதி இடம்பெற வேண்டிய மின் கட்டண திருத்தம் நடைமுறைப்படுத்தப்படவில்லை என ஐக்கிய கனிய எண்ணெய் தொழிற்சங்க ஒன்றியம் குற்றம் சுமத்தியுள்ளது.
கொழும்பில் நேற்று (16) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அதன் அழைப்பாளர் ஆனந்த பாலித இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.
“திருத்தப்பட வேண்டிய மின்சாரக் கட்டணம் குறித்த தரவுகளை மின்சார சபை இன்னும் பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவுக்கு அனுப்பவில்லை. ஜனாதிபதி அவர்களே, தற்போது மின்சார சபையின் நிகர லாபம் 155 பில்லியனைத் தாண்டியுள்ளது.
ஏன் இன்னும் சுரண்டுவதற்கு அனுமதிக்கிறீர்கள்? நீங்கள் மக்கள் தொடர்பில் சிந்திப்பவராக இருந்தால் மின்சார சபையிடம் கேளுங்கள் இன்னும் உறங்குகிறீர்களா? என்று. இது தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுத்து மின் கட்டணத்தை 45 சதவீதமாவது குறைக்க வேண்டும்” என்றார்.