முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, 16 சமையல்காரர்கள், 163 பாதுகாப்புப் பணியாளர்கள், 30 குடைகள் மற்றும் 20இற்கும் மேற்பட்ட வாகனங்கள் அடங்கிய விரிவான சலுகைகளை கோரினார். எனினும் தாம், அதனை நிராகரித்துள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசாங்க விதிமுறைகளுக்கு இணங்க விக்ரமசிங்கவிற்கு மூன்று வாகனங்கள் மாத்திரமே வழங்கப்படும் என ஜனாதிபதி, மாத்தறை தங்காலையில் நேற்று (19.10.2024) இடம்பெற்ற போது பேரணியின் போது தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், முன்னாள் ஜனாதிபதிகளுக்கு பொது நிதி மூலம் ஆதரவளிக்கப்படுவதை தடுக்க அரசாங்கம் புதிய சட்டத்தை அறிமுகப்படுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், விக்ரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆகியோரின் இல்லங்களில் முன்னர் வைக்கப்பட்டிருந்த இரண்டு அம்பியூலன்ஸ் வண்டிகளை மீளப்பெற்றுக் கொண்டதாக குறிப்பிட்ட அநுரகுமார திஸாநாயக்க, இந்த வசதிகளை அவர்கள் தமது தனிப்பட்ட சொத்தாகக் கருதக் கூடாது எனக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், பொதுமக்களின் பணத்தில் தனிப்பட்டவர்கள் சுகபோகங்கள் அனுபவிப்பதை ஏற்க முடியாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அவர்களுக்கு பாதுகாப்பு பிரச்சினை இருந்தால், அதனை அரசாங்கம் உரிய முறையில் நிவர்த்தி செய்யும் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.