முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் (Ranil Wickremesinghe) அரசாங்க வாகனங்களில் அதிகமானவை மீள ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் 11 வாகனங்கள் இருப்பதாக தெரிவிக்கப்படும் செய்தியில் உண்மை இல்லை என ரணிலின் முன்னாள் பணிக்குழாம் பிரதானி சாகல ரத்நாயக்க (Sagala Ratnayaka) தெரிவித்துள்ளார்.
அத்துடன் ரணில் விக்ரமசிங்கவின் பாதுகாப்பு பிரிவினரே தங்களின் கடமையை செய்வதற்கு சில உபகரணங்களை அரசாங்கத்திடம் கேட்டிருக்கிறது என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
புதிய ஜனநாயக முன்னணி நேற்று (20) கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே சாகல ரத்நாயக்க இவ்வாறு குறிப்பிட்டார்.
அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், “ரணில் விக்ரமசிங்கவிடம் அரசாங்கத்தின் 11 வாகனங்கள் இருப்பதாகவும் அதனை உடனடியாக கையளிக்குமாறு தெரிவித்து கடிதம் அனுப்பி இருப்பதாகவும் செய்தி வெளியிடப்பட்டிருக்கிறது.
இது தொடர்பில் ரணில் விக்ரமசிங்கவின் பாதுகாப்பு பிரிவினரிடம் கேட்டபோது, அவ்வாறு எந்த கடிதமும் கிடைக்கவில்லை என தெரிவித்தார்கள்.
ஆனால் ரணில் விக்ரமசிங்கவின் பாதுகாப்புக்காக வழங்கப்பட்டிருந்த வாகனங்களில் அதிகமான வாகனங்களை மீள கையளித்திருக்கிறோம். இன்னும் சில வாகனங்களே இருக்கின்றன.
அவை முன்னாள் ஜனாதிபதி என்றவகையில், அரசியலமைப்பின் மூலம் அவர்களுக்கு வழங்கப்படவேண்டிய பாதுகாப்புக்கு தேவையான வாகனங்களே இருக்கின்றன.
அதேநேரம் ரணில் விக்ரமசிங்க 30 குடைகளை கேட்டிருப்பதாக தேசிய மக்கள் சக்தியினர் (NPP) பிரசாரம் செய்து வருகின்றனர். அதில் எந்த உண்மையும் இல்லை.
ரணில் விக்ரமசிங்க எதனையும் கேட்டதில்லை. மாறாக ரணில் விக்ரமசிங்கவுக்கு பாதுகாப்பு வழங்கும் பாதுகாப்பு பிரிவினர் தங்களின் கடமையை செய்வதற்கு சில உபகரணங்களை அரசாங்கத்திடம் கேட்டிருக்கிறது. அது பாதுகாப்பு பிரிவினர் கேட்டிருக்கிறார்களே தவிர ரணில் விக்ரமசிங்க எதனையும் கேட்டதில்லை.
அத்துடன் தேசிய பாதுகாப்பு தொடர்பான முன்னாள் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலாேசகர் என்றவகையில், அந்த பதவிக்குரிய கொடுப்பனவுகள் மற்றும் நிவாரணங்கள் எனக்கு வழங்கப்பட்டன.
தேர்தல் அறிவிக்கப்பட்டதன் பின்னர் அவை எதனையும் நான் பெற்றுக்கொள்ளவில்லை. எனக்கு வழங்கப்பட்டிருந்த வாகனத்தையும் அப்போதே திருப்பிக்கொடுத்தேன்“ என தெரிவித்தார்.