கம்பஹா மாவட்டத்தில் உள்ள யக்கலை பகுதியில் பல்வேறு திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய ஆறு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதுதொடர்பில் தெரியவருவதாவது,
யக்கலை பகுதியில் கடந்த 20 மற்றும் 21 ஆம் திகதிகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் பல்வேறு போதைப்பொருட்களுடன் 3 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள வெயாங்கொடை பிரதேசத்தைச் சேர்ந்த 31, 33 மற்றும் 35 வயதுடையவர்களே என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, சந்தேக நபர்கள் மூவரும் கம்பஹா நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் சந்தேக நபர்களை பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரணை நடத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சந்தேக நபர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில், வெல்லம்பிட்டிய, மினுவாங்கொடை, தெமட்டகொடை, கிராண்ட்பாஸ் மற்றும் கிரிபத்கொடை ஆகிய பொலிஸ் பிரிவுகளுக்கு உட்பட்ட பகுதிகளில் திருடப்பட்ட 06 மோட்டார் சைக்கிள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
திருடப்பட்டதாக கூறப்படும் பல்வேறு பொருட்களை தன்வசம் வைத்திருந்த மேலும் 3 சந்தேக நபர்கள் நுங்கமுவ மற்றும் பல்லேவெல ஆகிய பிரதேசங்களில் வைத்து யக்கலை பொலிஸாரால் கடந்த 23 ஆம் திகதி கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் குபல்ஒலுவ மற்றும் பல்லேவெல பகுதியைச் சேர்ந்த 21 , 23 மற்றும் 37 வயதுடையவர்கள் ஆவர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை யக்கலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.