நாட்டில் உள்ள பொலிஸ் அதிகாரிகளில் அதிகளவானோர் பல்வேறு நோய்களால் அவதிப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், அவர்களுக்கு தேவையான சிகிச்சை அளிக்க அரச வைத்தியசாலைகளில் விடுதிகளை ஒதுக்குவதில் அரசு கவனம் செலுத்தியுள்ளது.
அதிகப்படியான குடிப்பழக்கம், உணவு கட்டுப்பாட்டின்மை மற்றும் சரியான உடற்பயிற்சியின்மை போன்ற காரணங்களால் பொலிஸ் உத்தியோகத்தர்கள் நோய்வாய்ப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.
பொலிஸ் அதிகாரிகளின் உடல்நிலை குறித்து நடத்தப்பட்ட கணக்கெடுப்பின் முடிவுகளின்படி, சுமார் 45% பொலிஸ் அதிகாரிகள் தொற்றாத நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரியவந்துள்ளது.
கடந்த காலங்களில் பெரும்பாலான பொலிஸார் விளையாட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தாலும், தற்போது விளையாட்டு அல்லது உடற்பயிற்சியில் ஈடுபடும் அதிகாரிகள் குறைந்துள்ளனர்.
பல அதிகாரிகளின் உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.
இதன்படி, பெலிஸ் அதிகாரிகளின் ஊட்டச்சத்தை அதிகரிக்க, உணவு பட்டியல் தயாரித்து, பொலிஸ் நிலையங்களுக்கு அனுப்பி வைத்தாலும், அது சரியாக செயல்படவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.
இலங்கையில், ஒரு மாதத்தில் சராசரியாக 17 பொலிஸ் அதிகாரிகள் உயிரிழப்பதாகவும், ஒவ்வொரு ஆண்டும் சுமார் 23 அதிகாரிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர் என்றும் தகவல் தெரிவிக்கின்றன.
எனவே நோய்வாய்ப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு சிகிச்சையளிப்பதற்கான வேலைத்திட்டம் சுகாதார அமைச்சுடன் கலந்தாலோசித்து எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்தப்படும் என பதில் பொலிஸ் மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.