கட்டுநாயக்க விமான நிலையத்தில் (BIA) பாதுகாப்பு தொடர்பில் போலி தொலைபேசி அழைப்பை மேற்கொண்ட தந்தையும் மகனும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதன்போது, நேற்றைய தினம் (ஒக்டோபர் 28) விமான நிலையத்தில் உள்ள தொலைபேசி செயற்பாட்டாளரை தொடர்பு கொண்டு இந்த போலி தொலைபேசி அழைப்பு விடுக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், கைது செய்யப்பட்ட மகனுக்கு 30 வயது எனவும் தந்தைக்கு சுமார் 50 வயது எனவும் காவல்துறையினர் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட மகனிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது, கட்டுநாயக்க விமான நிலையத்தின் அவசர தொலைபேசி இலக்கத்தை தொலைக்காட்சியில் காட்சிப்படுத்தியதை பார்த்து தான் அழைப்பு விடுத்ததாக தெரிவித்துள்ளார்.
மேலதிக விசாரணை
எவ்வாறாயினும், தொலைபேசி அழைப்பை மேற்கொண்ட மகன் மனநலம் பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது.
இதன்படி, அழைப்பை பெற்ற தொலைபேசியின் உரிமையாளர்களான தந்தையும் மகனும் வாரியபொல பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நீர்கொழும்பு பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
தென்னிலங்கை ஊடகமொன்று குறித்த விடயத்தை உறுதிபடுத்தியதாக இந்த செய்தி வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.