யாழ். பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கற்கோவளம் – புனிதநகர் பகுதியில் கணவன் மற்றும் மனைவி கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வீட்டினுள் உறங்கிக் கொண்டிருந்த கணவனும், மனைவியும் கொங்கிறீட் கற்களால் தாக்கிப் படுகொலை செய்யப்பட்ட நிலையில் நேற்றுக் காலை(30) சடலங்களாக மீட்கப்பட்டிருந்தனர்.
இந்தக் கொலையை மூவர் சேர்ந்து செய்ததாக பொலிஸாருக்குக் கிடைத்த புலனாய்வுத் தகவலின் அடிப்படையில் கொலையாளிகள் மூவரில் இருவர் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஒருவர் தலைமறைவாகியுள்ளார். கொலையுண்ட மாணிக்கம் சுப்பிரமணியம் (வயது 54), அவரது மனைவி சுப்பிரமணியம் மேரி ரீட்டா (வயது 53) ஆகியோர் சலவைத் தொழிலில் ஈடுபட்டு வந்திருந்தனர்.
இந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் விடுதியின் துணிகளை ஒப்பந்த அடிப்படையில் துவைப்பதற்காக ஏலத்தில் பெற்றுள்ளனர்.
இதன் காரணமாகத் தொழில் ரீதியில் ஏற்பட்ட போட்டியால் மூவர் சேர்ந்து தம்பதியினரைப் படுகொலை செய்துள்ளமை பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள இரண்டு சந்தேகநபர்களில் ஒருவர் ஏற்கனவே இரு கொலைகளுடன் தொடர்பட்ட சந்தேகநபர் என்றும், அவருக்கு எதிரான வழக்கு யாழ். மேல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தமையும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் கைதான கொலைச் சந்தேகநபர்கள் இருவரும் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்