கட்டுநாயக்க விமான நிலையத்தில் யாழ்ப்பாணத்தை (Jaffna) சேர்ந்த இளைஞன் ஒருவர் குடிவரவு குடியல்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
போலி வீசா மூலம் நேற்றிரவு (8) பிரான்ஸுக்கு (France) தப்பிச் செல்ல முயன்ற வேளை இவர் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறை பிரதேசத்தில் வசிக்கும் 23 வயதுடைய இளைஞர் என தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், நேற்று இரவு 08.35 மணியளவில் இந்தியாவின் சென்னைக்கு புறப்படவிருந்த இண்டிகோ எயார்லைன்ஸ் விமானத்தில் (6 E.-1196) செல்வதற்காக அவர் கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வந்துள்ளார்.
இளைஞனின் நடத்தை மற்றும் விசாரணையின் போது எழுந்த சந்தேகத்தின் அடிப்படையில், அவர் பிரதான குடிவரவு அதிகாரியிடம் விசாரணைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.
அதிகாரி இந்த இளைஞனை விசாரித்த பின்னர், அவர் தனது ஆவணங்களை எல்லைக் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகளுக்கு அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளார்.
சூட்கேஸைக் கடுமையாக சோதனை
அவர் கொண்டு வந்த சூட்கேஸைக் கடுமையாக சோதனை செய்த குடிவரவுத் துறை அதிகாரிகள், அதில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இந்தியாவிலிருந்து இத்தாலிக்கு செல்லும் விமானப் பயணச் சீட்டைக் கண்டுபிடித்தனர்.
அதன் பின்னர், இந்த இளைஞனை கைது செய்த குடிவரவு திணைக்கள அதிகாரிகள், மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.