மன்னாரில்(Mannar) கனிய மணல் அகழ்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து வீதிக்கிறங்கிய மக்கள் தொடர்பில் நீதிமன்றில் செய்த முறைப்பாட்டினை மீளப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் தெரிய வருகையில்,
மன்னார் மாவட்ட உதவி செயலாளர் உள்ளிட்ட 20ற்கும் மேற்பட்ட அரச நிறுவனங்களின் பிரதிநிதிகள் குழுவொன்று கடந்த 6 ஆம் திகதி, டைட்டேனியம் அகழ்விற்காக மாதிரிகளை எடுக்கும் நோக்கில், மன்னார் பிரதேச செயலகத்திற்குட்பட்ட ஓலைத்தொடுவாய், வள நகர் பிரதேசத்திற்கு சென்றிருந்தனர்.
நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல்
இதன்போது “இந்த இடத்திற்கு யாரும் வர முடியாது. வந்தாலும் இறங்கவிடமாட்டோம். இதற்கு அரசாங்கம் ஒரு தீர்வை தர வேண்டும்’’ என மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மண் மாதிரிகளை சேகரிக்க வந்த அதிகாரிகளை கிராம மக்கள் தடுத்தமையால், அவ்விடத்திற்கு வந்த மன்னார் பொலிஸ் நிலைய அதிகாரிகள், குற்றவியல் நடைமுறை சட்டக்கோவை 106 இன் கீழ் அரச அதிகாரிகளின் கடமைகளில் தலையிடக்கூடாது என உத்தரவிடுமாறு கோரி, பி அறிக்கை ஊடாக மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தனர்.
வழக்கு விசாரணைகள் இடம்பெற்றுக் கொண்டிருந்த வேளையில், நீதிமன்றத்தில் இருந்து வெளியேறிய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மீண்டும் நீதிமன்றத்திற்குள் வந்து வழக்கை மீளப் பெறுவதாக மன்னார் நீதவானிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
அந்த வழக்கின் போது, ஒரு பொலிஸ் அதிகாரி திடீரென வெளியே சென்று திரும்பி வந்து, தனக்கு தொலைபேசி அழைப்பு ஒன்று வந்ததாகவும், வழக்கை மீளப் பெறுவதாகவும், வழக்கு நிறைவுபெறும் தருவாயில் நீதிமன்றத்தில் தெரிவித்ததாக கூறப்படுகிறது.