கோடீஸ்வர மாணிக்கக்கல் வர்த்தகர் ஒருவரின் வீட்டிற்குள் நுழைந்த இனந்தெரியாத 5 கொள்ளையர்கள் வீட்டில் இருந்த சுமார் 7 கோடி பெறுமதியான நகைகள் மற்றும் பணத்தை திருடிவிட்டு காரில் தப்பிச் சென்றுள்ளனர்.
நேற்று (10) இரவு லக்கல-தேவாலதெனிய பிரதேசத்தில் இந்த கொள்ளை சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
வர்த்தகரின் தலையில் கைத்துப்பாக்கியை வைத்து கொள்ளை
நேற்றிரவு 9 மணியளவில், வீட்டின் பின்புற சுவரில் இருந்து குதித்த கொள்ளையர்கள் முகத்தை மூடிக்கொண்டு வந்து வர்த்தகரின் தலையில் கைத்துப்பாக்கியை வைத்து பயமுறுத்தி, கை, கால்களை கட்டியவாறு வீட்டிற்குள் அழைத்துச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வர்த்தகர், அவரது மனைவி மற்றும் மனைவியின் தந்தையினதும் கை, கால்களை கட்டி வைத்து இது தொடர்பான திருட்டை மேற்கொண்டனர். கொள்ளைச் சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படும் கார் இன்று (11) காலை கலேவெல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தலகிரியாகம பிரதேசத்தில் வீதிக்கு அருகில் வைத்து பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டது.
மாணிக்கக்கல் வர்த்தகரிடம் இருந்த பணம், தங்கம் மற்றும் சுமார் 3 கோடி பெறுமதியான மாணிக்கக்கல் போன்றவற்றையும் கொள்ளையர்கள் திருடிச் சென்றுள்ளனர்.
பின்னர் மனைவி மற்றும் அவரது தந்தையின் கை, கால்களை கட்டிவிட்டு கொள்ளைச் சம்பவத்தை செய்துவிட்டு காருடன் தப்பிச் சென்றதாக பொலிஸில் செய்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீதியில் கைவிட்டுச் சென்ற காரை ‘கியோ’ என்ற பொலிஸ் மோப்பநாய் கொண்டு சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அங்கு, கொள்ளையர்கள் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் ஒரு ஜோடி காலணிகள் கண்டுபிடிக்கப்பட்டதுடன், பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
வர்த்தகரின் வீட்டிற்கு சிறிது தூரத்தில் நாய் நின்றதாகவும், சந்தேக நபர்கள் அந்த இடத்தில் தங்கியிருக்கலாம் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
பிரதான வீதியூடாக சுமார் மூன்று கிலோமீற்றர் தூரம் சென்ற இந்த மோப்ப நாய் மற்றுமொரு கிளை வீதியில் நின்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் சம்பவம் தொடர்பில் வர்த்தகரின் மனைவி மற்றும் தந்தை விசாரணைகளுக்காக தம்புள்ளை சட்ட வைத்திய அதிகாரியிடம் அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.