சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் சலுகைகளை பெற முடியாமல் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சிறை அதிகாரிகளிடம் இருந்து சிறப்பு மரியாதை கிடைக்காததால் கைதிகள் கேலி செய்ததாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முன்னாள் சிறைச்சாலைகள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வதே (Lohan Rathwaththe) ஒருமுறை சிறைச்சாலையில் உள்ள கைதிகளை தாக்கி முழங்காலில் நிறுத்திய விதத்தை ஒருமுறை நினைவுபடுத்தியதுடன் அவரையும் அதே முறையில் செய்ய வைத்ததாக கூறப்படுகிறது.
வைத்தியசாலையில் அனுமதி
இதனையடுத்து அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மிரிஹான (Mirihana) பகுதியில் உள்ள அவரது மனைவியின் இல்லத்திலிருந்து இலக்கத் தகடு இல்லாத கார் ஒன்று மீட்கப்பட்டமை தொடர்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் கடந்த 31ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள லொஹான் ரத்வத்த (Lohan Ratwatte) தாக்கல் செய்திருந்த பிணை மனுவை எதிர்வரும் 19ஆம் திகதி பரிசீலிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த மனு இன்றையதினம் (11.11.2024) நீதியரசர் நிஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் சஷி மகேந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிரப்பிக்கப்பட்டுள்ளது.
வெளியில் இருந்து உணவு
இதேவேளை, அர்ஜுன் அலோசியஸ் கடந்த வழக்குகளை போன்று சிறைச்சாலைக்கு வெளியில் இருந்து உணவு கொண்டுவர முயற்சித்ததாகவும், ஆனால் அதுவும் தடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
வரி ஏய்ப்பு செய்த குற்றச்சாட்டில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள அர்ஜூன் அலோசியஸ் தற்போது சிறைச்சாலையில் தச்சன் வேலை செய்யும் பிரிவில் பணியாற்றி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவும் (Johnston Freanando ) விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த போது கடுமையான சித்திரவதைகளை அனுபவிக்க நேரிட்டதாகவும் கூறப்படுகிறது.