இலங்கையில் 27 வருடங்களுக்கு பின் கொலை வழக்கிலிருந்து இருவர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
அனுராதபுரம் – ராஜாங்கனையில் 27 வருடங்களுக்கு முன்னர் நபரொருவரைக் கொன்றதாக அனுராதபுரம் மேல் நீதிமன்றில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த பிரதிவாதிகள் இருவர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
குற்றச்சாட்டுகளை நிரூபிக்க தவறிய அரசுத் தரப்பு
இந்த உத்தரவை வடமத்திய மாகாணத்தின் முன்னோடி மேல் நீதிமன்ற நீதிபதியும் தற்போதைய குளியாப்பிட்டிய மேல் நீதிமன்ற நீதிபதியுமான மனோஜ் தல்கொடபிடிய உத்தரவிட்டார்.
இதற்கமைய ராஜாங்கனையைச் சேர்ந்த உக்குவா என்ற தெதிகமகே பிரேமசிறி மற்றும் வசந்த என்ற கே. வசந்த குமார ஆகிய பிரதிவாதிகளே விடுவிக்கப்பட்டுள்ளனர்.
வழக்கின் தீர்ப்பை அறிவித்தமேல் நீதிமன்ற நீதிபதி, பிரதிவாதிகள் மீதான குற்றச்சாட்டுகளை நியாயமான சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்க அரசுத் தரப்பு தவறியதால், குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுவிக்கப்படுவதாக அறிவித்தார்.
1997 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 29 ஆம் திகதி அதனை அண்டிய தினத்தில், பிரதிவாதிகள் அனுராதபுரம் மேல் நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்குட்பட்ட ராஜாங்கனையில் இக்குற்றத்தைச் செய்ததாக இருவரும் கைதாகியிருந்தனர்.
மேலும் இலங்கை தண்டனைச் சட்டத்தின் 296 ஆவது பிரிவின் கீழ் சட்டமா அதிபரால் அனுராதபுரம் மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.