முன்னாள் பிரதமர் இம்ரான் கானை விடுதலை செய்யக்கோரி, இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற போராட்டங்களுக்குப் பின்னர், இம்ரான் கான், அவரது மனைவி புஸ்ரா பீபி மற்றும் நூற்றுக்கணக்கான தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சித் தொண்டர்கள் மீது பாகிஸ்தான் அரசாங்கம், பயங்கரவாதம் உட்பட தொடர் குற்றச்சாட்டுகளை பதிவு செய்துள்ளது.
இதன்படி,பயங்கரவாதம், தலைநகரில் போராட்டங்களை கட்டுப்படுத்தும் சட்டத்தை மீறியமை, பொலிஸ் மீதான தாக்குதல்கள், கடத்தல், அரச விவகாரங்களில் தலையிட்டமை மற்றும் நான்கு பேருக்கு மேல் ஒன்று கூடும் சட்டத்தை மீறியமை போன்ற குற்றச்சாட்டுக்கள், இம்ரான் கான், பீபி மற்றும் அவரின் கட்சித்தொண்டர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளன.
முன்னதாக, அரசாங்கத்திற்கு எதிராக, உள்ளிருப்புப் போராட்டத்தில் பங்கேற்க கடந்த ஞாயிற்றுக்கிழமை இஸ்லாமாபாத்திற்குச் சென்ற கானின் கட்சியைச் சேர்ந்த கிட்டத்தட்ட 1,000 பேரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
இம்ரான் கான், 2023, ஓகஸ்ட் முதல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் பல குற்ற வழக்குகளை எதிர்கொண்டுள்ளார்.
அதேநேரம் இந்த வருடம் ஒக்டோபரில் விடுவிக்கப்படுவதற்கு முன்னர், கானின் மனைவியான பீபி இந்த ஒன்பது மாதங்கள் சிறைப்படுத்தப்பட்டிருந்தார்.
இந்தநிலையில் கடந்த வாரம், அரசாங்கத்தால் நாடு முழுவதும் சாலைத் தடைகள் ஏற்படுத்தப்பட்டபோதும், மத்திய இஸ்லாமாபாத்தில், பீபி தலைமையில், இம்ரான் கானின் விடுதலையை கோரி, பாரிய போராட்டம் நடத்தப்பட்டது