இலங்கையில் வருகின்ற நான்கு அல்லது ஐந்து நாட்களில் மீண்டும் ஒரு தாழமுக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளதாக யாழ் பல்கலைக்களகத்தின் புவியல் துறையின் தலைவரும் விரிவுரையாளருமான நாகமுத்து பிரதிபராஜா தெரிவித்துள்ளார்.
தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள ஃபெங்கல் என பெயரிடப்பட்டுள்ள புயல் எதிர்வரும் மணித்தியாலங்களில் மேற்கு அல்லது வடமேற்கு திசையில் நகர்ந்து வட தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு இடையேயான கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறித்த புயலானது திருகோணமலைக்கு வடக்கே 420 கிலோமீற்றர் தொலைவிலும் காங்கேசன்துறைக்கு வடக்கே 280 கிலோமீற்றர் தொலைவிலும் நிலைகொண்டிருந்தாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த புயல் இந்தியாவுக்குள் நுழையும் போது அது படிப்படியாக வலுவிழக்கும் என்பதுடன், இதனால் இலங்கையின் வானிலையில் ஏற்படும் தாக்கமும் குறைவடையும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.
அதன்படி, நாட்டின் பல பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் வட மாகாணத்தின் சில பகுதிகளில் 50 மில்லிமீற்றருக்கு அதிகளவிலான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
குறித்த புயலான நாட்டை விட்டு கடந்து செல்லும் போது நாட்டில் தெளிவான வானிலையை காணமுடியும் எனவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன், வடக்கு, வடமத்திய, வடமேல், மேல், மத்திய மற்றும் தென் மாகாணங்களில் இடைக்கிடையே மணித்தியாலத்துக்கு 55 கிலோமீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என குறிப்பிட்டுள்ளார்