பொதுஜன பெரமுனவின் அடுத்த தலைவராக நாமல் ராஜபக்சவை முன்னிறுத்துவதற்கான செயற்திட்டங்களை அக்கட்சி முன்னெடுத்துள்ளது.
அதன் பிரகாரம் எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலின்போதும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியை நாமல் ராஜபக்சவே வழிநடத்துவார் என்று அக்கட்சி வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
அடுத்த தலைவர்
ஜனாதிபதித் தேர்தலில் பொதுஜன பெரமுண கட்சியின் சார்பில் போட்டியிட்ட நாமல் 342,781 வாக்குகளைப் பெற்று வெறும் இரண்டரை வீத வாக்குகளுடன் நான்காம் இடத்துக்குத் தள்ளப்பட்டார்.
எனினும் கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது பொதுஜன பெரமுனவை நாமல் ராஜபக்சவே வழிநடத்தினார்.
குறித்த ஜனாதிபதித் தேர்தலில் கட்சி பெற்ற வாக்குகளை விட சற்று கூடுதலாக 350,429 வாக்குகள் பெற்றுக் கொண்டிருந்தது. மொத்த வாக்கு வீதத்தில் அது 3.14 வீதமாகும். அதன் பிரகாரம் வாக்கு சதவீதத்திலும் அக்கட்சி சற்று முன்னேற்றம் கண்டிருந்தது.
தேசியப்பட்டியல்
அத்துடன் தேசியப்பட்டியல் உள்ளடங்கலாக மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களையும் பெற்றுக் கொண்டுள்ளது.
இந்நிலையில் எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலை கட்சியின் தேசிய அமைப்பாளரான நாமல் ராஜபக்சவே வழிநடத்துவார் எனவும், இரண்டாம் தலைமைத்துவத்தை உருவாக்குவதற்கான ஒத்திகை களமாக உள்ளூராட்சி சபைத் தேர்தல் பயன்படுத்தப்படவுள்ளது எனவும் பொதுஜன பெரமுண கட்சியின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன் மூலமாக வெகுவிரைவில் பொதுஜன பெரமுண கட்சியின் தலைவராக நாமல் ராஜபக்சவை முன்னிறுத்துவதற்கான களத்தை உருவாக்கும் செயற்திட்டங்களை அக்கட்சி முன்னெடுத்துள்ளதாக அறியக் கிடைத்துள்ளது