எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள இலங்கை சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
பண்டிகைக் காலத்தை கருத்திற் கொண்டு, மக்கள் அதிகம் கூடும் நகரங்களில் இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதுடன், இதன்போது விற்பனை செய்யப்படும் உணவு மற்றும் பானங்களின் தரம் குறித்து தீவிரமாக ஆராயப்படும் என்று அந்த சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.
இதன்படி, இந்த செயற்றிட்டத்திற்காக சுமார் 1750 பொது சுகாதார பரிசோதகர்கள் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது உணவு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களின் தரம் குறித்தும் பரிசோதிக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இந்த வேலைத்திட்டத்தின் மூலம் மக்களின் உணவு பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்தை பாதுகாக்கும் நோக்கில் கடுமையான விதிமுறைகள் பின்பற்றப்படும் என்று சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன மேலும் சுட்டிக்காட்டினார்.




















