ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமை பதவி தொடர்பான வழக்கில் நீதிமன்றத்தை அவமதித்ததாகக் கூறி, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை மீளப்பெற நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
குறித்த வழக்கானது இன்று (16.12.2024) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்குழு உறுப்பினர் மொன்டேக் சரத்சந்திரவினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இதன்படி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக செயற்படுவதற்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்த போதிலும், மைத்திரிபால சிறிசேன அந்த பதவியில் செயற்பட்டு நீதிமன்றத்தை அவமதித்துள்ளதாக மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த மனு இன்று மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களான நிஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் சஷி மகேந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, பிரதிவாதியான மைத்திரிபால சிறிசேன சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்ன, இனிமேல் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவிக்கு தமது கட்சிக்காரர் போட்டியிட மாட்டார் என்று நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.
அந்த உண்மைகளின் அடிப்படையில் இந்த மனுவை தீர்ப்பதற்கு வாய்ப்பு இருப்பதாக சட்டத்தரணி நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், மனுதாரர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி சாந்த ஜயவர்தன, இந்த அறிவிப்பில் திருப்தியடைவதாகவும், சமர்ப்பிக்கப்பட்ட உண்மைகளின் அடிப்படையில் மனுவை தீர்ப்பதற்கு சம்மதிப்பதாகவும் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
அதன்படி, மனுவை விசாரித்த மேல்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் மனுவை மீளப்பெற உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.