நடப்பாண்டிற்கான சிறுபோகத்தில் வெள்ளம், வறட்சி மற்றும் காட்டு யானையால் ஏற்பட்ட பயிர்ச் சேதங்கள் தொடர்பான சகல நட்டஈடுகளையும் எதிர்வரும் ஜனவரி மாதம் 5 ஆம் திகதிக்கு முன்னர் வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் ஒக்டோபர் மாதம் வரையிலான சிறுபோகத்தின் போது பல்வேறு காரணங்களால் நெல் மற்றும் ஏனைய பயிர்கள் அழிவடைந்துள்ளன. குறிப்பாக வறட்சி, வெள்ளம் மற்றும் காட்டு யானைகளால் சேதங்கள் ஏற்பட்டுள்ளன.
ஜனவரி மாதம் 05ஆம் திகதிக்குள் அனைத்து மாவட்டங்களுக்கும் பயிர்ச் சேதங்களுக்கான கொடுப்பனவினை செலுத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், இதுவரையில் சுமார் 80% விவசாயிகளுக்கு 80 மில்லியன் ரூபாவை செலுத்த முடிந்துள்ளதாகவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீதமுள்ள அனைத்து விவசாயிகளுக்கும் ஜனவரி 05ஆம் திகதிக்குள் உரிய இழப்பீடு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதெனவும் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக நட்டஈடு வரவு வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன், மிகவும் கவனமாகவும் வெளிப்படைத்தன்மையுடனும் இழப்பீடு வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
2024/2025 பெரும்போகத்தில் ஏற்பட்ட சேதங்களுக்கான நட்டஈட்டை பெப்ரவரி மாத தொடக்கத்தில் வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.