இரத்தினபுரி , எஹலியகொட பிரதேசத்தில், பேசிய சீதனத்தை தரவில்லை என்பதால் மாமியாரை கொலை செய்த மருமகன் ஒருவர் தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சந்தேக நபர் கடந்த 27ஆம் திகதி காலை 6.30 மணியளவில் தனது மாமியை கத்தியால் குத்தி கொன்றுவிட்டு தனது ஸ்கூட்டரில் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
திருமண நிச்சயதார்த்தத்தின் போது தாய் வீட்டை சீதனமாக வழங்குவதாக மாமனார் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாததால் ஆத்திரமடைந்த மருமகன், மாமியாரை கத்தியால் குத்தி கொன்றுவிட்டு, மரத்தில் தூக்கிட்டு உயிரை மாய்த்துள்ளார்.
வாக்குறுதி அளித்த மாமனார் இறந்ததையடுத்து, அவர்களுடன் வாழ்ந்த மாமியார், வீட்டை மருமகனுக்கு எழுதிவைக்காத கோபத்தில் இந்த கொலையை செய்துள்ளதாக எஹலியகொட பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
எஹலியகொட, புலகாபிட்டிய பிரதேசத்தை சேர்ந்த ஓய்வுபெற்ற பாடசாலை ஆசிரியையான கேஷானி சந்திம ஜயலத், மருமகனின் தாக்குதலில் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
இந்தக் கொலை இடம்பெற்று 24 மணித்தியாலங்கள் நிறைவடைவதற்கு முன்னர் இங்கிரிய பிரதேசத்தில் சந்தேகநபர் உயிரை மாய்த்துள்ளார். சந்திமால் கெதுங்க என்ற 49 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரை மாய்த்துள்ளார்.
சம்பவத்தில் தப்பியோடிய சந்தேகநபரின் சடலம் கடந்த 28ஆம் திகதி காலை மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.