பொலன்னறுவை சோமாவதி ரஜ மகா விகாரைக்கு செல்லும் வீதியின் ஒரு பகுதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால் வாகன போக்குவரத்துக்கு பாரிய இடையூறு ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
புலஸ்திபுர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுங்கவில – சோமாவதிய வீதியானது சோமாவதி ரஜமஹா விகாரைக்கு அண்மித்த திக்கல பிரதேசத்தில் இருந்து ஆரம்பித்து சுமார் 2 கிலோமீற்றர் தூரம் நீரில் மூழ்கியுள்ளது.
நேற்று (13) முதல் பெய்து வரும் கடும் மழையினால் மகாவலி ஆற்றின் நீர் மட்டம் உயர்வடைந்தமையினால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், அந்தப் பாதையில் போக்குவரத்து முற்றிலும் தடைபட்டுள்ளது.
சோமாவதி ரஜமஹா விகாரைக்கு சென்ற நபர்களை வெலிகந்த திசையில் இருந்து அவர்கள் வந்த பேருந்துகளில் திருப்பி அனுப்புவதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், அசம்பாவிதங்களைத் தடுப்பதற்கும், பாதிக்கப்பட்ட பகுதியில் காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.