வெளிநாட்டு கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இலங்கை மற்றும் ஜப்பானுக்கு இடையில் ஏற்கனவே எட்டப்பட்ட இணக்கப்பாடு குறித்த இருதரப்பு ஒப்பந்தத்தில் வெள்ளிக்கிழமை (07) இருநாடுகளும் கைச்சாத்திட்டன.
கொழும்பில் அமைந்துள்ள நிதியமைச்சில் இன்றையதினம் இலங்கை அரசாங்கத்தின் சார்பில் நிதியமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன மற்றும் ஜப்பான் அரசாங்கத்தின் சார்பில் இலங்கைக்கான அந்நாட்டு தூதுவர் அகியோ இஸோமாட்டா ஆகியோர் கைச்சாத்திட்டனர்.
இதுகுறித்து கருத்து வெளியிட்டிருக்கும் ஜப்பான் வெளிவிவகார அமைச்சு, இருதரப்பு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டதன் ஊடாக ஜப்பானுடனான கடன்மறுசீரமைப்பு செயன்முறையை இலங்கை உத்தியோகபூர்வமாகப் பூர்த்திசெய்திருப்பது வரவேற்கத்தக்கதாகும் எனத் தெரிவித்துள்ளது.
‘கடன்மறுசீரமைப்பு செயன்முறையின் விபரங்கள் மற்றும் நிபந்தனைகளை உள்ளடக்கியதாக கடந்த 2024 ஆம் ஆண்டு ஜுலை மாதம் இலங்கைக்கும், உத்தியோகபூர்வ கடன்வழங்குனர் குழுவில் அங்கம்வகிக்கும் நாடுகளுக்கும் இடையில் இருதரப்புப் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
அதனைத்தொடர்ந்து இலங்கைக்கும், அந்த உறுப்புநாடுகளுக்கும் இடையில் இருதரப்பு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு, அவை பரஸ்பரம் கைமாற்றம் செய்யப்படுவதே கடன்மறுசீரமைப்பு தொடர்பான இருதரப்பு இணக்கப்பாட்டின் நிறைவு செயன்முறையாகும்’ எனவும் ஜப்பான் வெளிவிவகார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
அத்தோடு இந்து சமுத்திரப்பிராந்தியத்தில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதியில் அமைந்திருக்கும் இலங்கையின் அபிவிருத்தி மற்றும் மேம்பாடு என்பன ஒட்டுமொத்த இந்து – பசுபிக் பிராந்தியத்தினதும் ஸ்திரத்தன்மைக்கும், சுபீட்சத்துக்கும் இன்றியமையாதவையாகும் எனவும் ஜப்பான் தெரிவித்துள்ளது.



















