அதிகவலு கதிரியக்க சக்தியுடன் கூடிய உயரிய தரத்துடன் கூடிய கதிரியக்க சிகிச்சை உபகரணங்கள் விநியோக கருத்திட்டத்தின் II ஆம் கட்டத்தை நடைமுறைப்படுத்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இன்று (18) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ இதனை தெரிவித்தார்.
புற்றுநோய் சிகிச்சை சேவைகளுக்குப் பயன்படுத்தப்படும் 14 நேர்கோட்டு ஆர்முடுக்கி இயந்திரங்களை 02 கட்டங்களின் கீழ் விநியோகிப்பதற்கு 2013 ஆம் ஆண்டில் ஐக்கிய இராச்சியத்தின் Elekta கம்பனிக்கும், சுகாதார அமைச்சுக்கும் இடையில் ஒப்பந்தமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதற்கமைய, குறித்த கருத்திட்டத்தின் 1 ஆம் கட்டத்தின் கீழ் தேசிய புற்றுநோய் நிறுவகத்தின் 04 நேர்கோட்டு ஆர்முடுக்கி இயந்திரங்களும், கண்டி தேசிய வைத்தியசாலைக்கு 02 இயந்திரங்களும், காலி தேசிய வைத்தியசாலைக்கு 01 இயந்திரமும், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு 01 இயந்திரமும், யாழ்ப்பாணம் தெல்லிப்பளை தள வைத்தியசாலைக்கு 01 இயந்திரமுமாக மொத்தம் 09 இயந்திரங்கள் தற்போது தாபிக்கப்பட்டுள்ளன.
இலங்கை புற்றுநோய் நிபுணத்துவ வைத்திய நிறுவகத்தால் சமர்ப்பிக்கப்படும் முன்மொழிவுகளை கருத்தில் கொண்டு, கருத்திட்டத்தின் II ஆம் கட்டத்தின் கீழ் இரத்தினபுரி, பதுளை, அம்பாந்தோட்டை, அநுராதபுரம் மற்றும் குருநாகல் உள்ளிட்ட 05 வைத்தியசாலைகளுக்கு உயர் தொழிநுட்பத்துடன் கூடிய infinity நேர்கோட்டு ஆர்முடுக்கி இயந்திரங்களை நிறுவுவதற்கும், குறித்த இயந்திரங்களை நிறுவுவதற்கு இயலுமாகும் வகையில் வைத்தியசாலையில் நிலத்தடி அரணை நிர்மாணிப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை இவ்வாறு அனுமதி வழங்கியுள்ளது.