இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் முடி உதிர்வைத் தடுக்கும் சிகிச்சை எடுத்துக்கொண்ட 67 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
பஞ்சாப்பின் சங்ரூரில் உள்ள ஒரு கோவிலில் முடி உதிர்வைத் தடுக்கும் சிகிச்சை முகாம் நடத்தப்பட்டது. அந்த முகாமை ஏற்பாடு செய்தவர்கள் இந்த சிகிச்சை மூலம் முடி உதிர்வது தடுக்கப்பட்டு வழுக்கை ஏற்படாமல் பாதுகாக்கலாம் என்று விளம்பரம் செய்துள்ளனர்.
இதனால், அங்கு தரப்பட்ட எண்ணெயை பலரும் வாங்கிச் சென்றனர். இதனைத் தொடர்ந்து, வாங்கிச் சென்றவர்கள் அதைப் பயன்படுத்தியபோது கண் எரிச்சல் போன்ற பிரச்னைகளால் அவதிப்பட்டு இதுவரை பாதிக்கப்பட்ட 67 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனையடுத்து முகாமை நடத்திய இருவர் மீது பொலிஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவர்களிடம் முறையான மருத்துவச் சான்றிதழோ, இந்த சிகிச்சைத் தொடர்பான சிறப்பு அனுமதியோ எதுவும் இல்லை என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் முகாம் நடத்தியவர்களின் அலட்சியமான நடவடிக்கை தொடர்பாக சுகாதாரத் துறை விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
அதேவேளை இதுபோன்ற சான்றளிக்கப்படாத மருத்துவ முகாம்களைத் தவிர்க்கவும், எந்தவொரு சிகிச்சை அல்லது மருந்தையும் எடுத்துக்கொள்வதற்கு முன்பு மருத்துவ நிபுணரின் ஆலோசனையைப் பெறவும் பொதுமக்களுக்கு சுகாதார அதிகாரிகள் அறிவுரை வழங்கி உள்ளதாகவும் கூறப்படுகின்றது.