Famous Actor To Join Lokesh Kanagaraj LCU : தமிழ் திரையுலகில் டாப் இயக்குனராக விளங்குபவர், லோகேஷ் கனகராஜ். இவர் உருவாக்கிய Lokesh Kanagaraj Universe-ல் சில படங்கள் உருவாகி இருக்கின்றன. இந்த நிலையில், இவரது யுனிவர்சில் புதிதாக ஒரு நடிகர் இணைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
எல்.சி.யு என்றால் என்ன?
மாநகரம் திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகிற்குள் அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். இந்த படம் பெரிய வெற்றி பெறவில்லை என்றாலும், அவரது கதையை மக்களுக்கு அறிமுகப்படுத்தியது. இதையடுத்து, அவர் எடுத்த படம் கைதி. கார்த்தி ஹீரோவாக நடித்திருந்த இந்த படம், சூப்பர்-டூப்பர் ஹிட் அடித்தது. இதையடுத்து, அவர் கமலை வைத்து இயக்கிய விக்ரம் படமும் பெரிய ஹிட் அடித்தது. இது மக்கள் மத்தியில் வரவேற்பை பெறுவதற்கு இன்னொரு காரணம், இதில் கைதி படத்தின் தொடர்ச்சி இருந்தது. இதைத்தொடர்ந்து ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு, விஜய் நடிப்பில் உருவாகியிருந்த லியாே திரைப்படமும் மக்கள் மத்தியில் வரவேற்பினை பெற்றது. இதுவும் எல்.சி.யு படங்களுள் ஒன்றாக உள்ளது. இப்படியாக உருவானதுதான் Lokesh Kanagaraj Universe.
LCU-வில் இருக்கும் நடிகர்கள்..
இதுவை இந்த யுனிவர்ஸில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, கார்த்தி,சூர்யா, விஜய் உள்ளிட்டோர் இருக்கின்றனர். இதில் விஜய் சேதுபதியின் கதாப்பாத்திரம் ஏற்கனவே இறந்து விட்டது. விஜய்யின் கதாப்பாத்திரமும் இனி தொடருமா என்பது பெரிய கேள்வி. பிறர் எல்.சி.யுவில் அப்படியே தொடர உள்ளனர். அவர்களுடன், இன்னொரு நடிகரும் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அவர் யார் தெரியுமா?
புது நடிகர்..
லோகேஷ் கனகராஜ் தற்போது எல்.சி.யுவில் ஒரு படத்தை இயக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தை கே.வி.என் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதில் ஹீரோவாக பிரபல தெலுங்கு நடிகரான ராம் சரண் நடிக்க இருக்கிறாராம்.
தெலுங்கில் இதுவரை மகதீரா, ரங்காஸ்தலம், RRR உள்ளிட்ட சில ஹிட் படங்களில் ஹீரோவாக நடித்தவர் ராம் சரண். இந்த நிலையில், இவரை லோகேஷ் கனகராஜ் தன் படத்தில் நடிக்க வைப்பது குறித்த தகவல் இணையத்தில் தீயாக பரவி வருகிறது.
கடைசி படம் தோல்வி..
ராம் சரண், கடைசியாக நடித்திருந்த படம், கேம் சேஞ்சர். ஷங்கர் இயக்கியிருந்த இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடித்திருந்தார். இதன் படப்பிடிப்பே 2 ஆண்டுகளுக்கும் மேல் இழுத்தடிக்கப்பட்ட நிலையில், படம் திரையரங்குகளில் வெளியான போது தோல்வி அடைந்தது.
ராம் சரண், தற்போது தனது 16வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இன்னும் பெயர் சூட்டப்படாத இந்த படத்தை பலரும் RC 16 என்று அழைத்து வருகின்றனர். இதில், ராம் சரணுக்கு ஜோடியாக ஜான்வி கபூர் நடிக்கிறார். ராம் சரண், லோகியுடன் ஒரு படத்தில் இணைய இருப்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
லோகியின் கூலி படம்!
லோகேஷ் கனகராஜ் தற்போது கூலி திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் நடந்து முடிந்தது. இந்த படம், வரும் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது, எல்.சி.யு படங்களுள் ஒன்று அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.