உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலை நடத்திய இரண்டு தற்கொலை குண்டுதாரிகள் பற்றிய தகவல்களை மறைத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள தெமட்டகொடை, மஹாவிலவைச் சேர்ந்த கோடீஸ்வர வர்த்தகரான மொஹமட் இப்ராஹிமுக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணையை ஜூலை மாதம் 2 ஆம் திகதி வரை கொழும்பு மேல் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
இந்த வழக்கு இன்று (24) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரட்ண மாரசிங்க முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இந்த வழக்கில் இரண்டாவது சாட்சியாகப் பெயரிடப்பட்ட கோடீஸ்வர வர்த்தகரான மொஹமட் இப்ராஹிமின் வீட்டில் பணிப்பெண்ணாகப் பணியாற்றிய பெண் வெளிநாடு சென்றுவிட்டதாகத் தெரியவந்துள்ளது.
மேலும் ஒரு சாட்சியாளர் வெளிநாடு செல்லும் அபாயம் இருப்பதாக வழக்கின் முறைப்பாட்டை வழிநடத்தும் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் லக்மினி கிரிஹாகம நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
அதன்படி, குறித்த சாட்சிக்கு புதிய அழைப்பாணை பிறப்பிக்குமாறு உத்தரவிட்ட நீதிபதி, அந்த நபரின் வெளிநாட்டு பயணம் தொடர்பான அறிக்கையினை குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்திலிருந்து அழைத்து நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு உத்தரவிட்டார்.
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களைத் திட்டமிட்ட தற்கொலை குண்டுதாரிகளான இன்சாப் அஹமட் மற்றும் இல்ஹாம் அஹமட் பற்றிய தகவல்களை பாதுகாப்புப் படையினரிடமிருந்து மறைத்து பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் செய்ததாகக் கூறி, கோடீஸ்வர வர்த்தகரான மொஹமட் இப்ராஹின் மற்றும் அவரது இரண்டு மகன்கள் மீது பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் சட்டமா அதிபர் வழக்குப் பதிவு செய்துள்ளார்.