பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் தமிம் இக்பாலுக்கு மைதானத்தில் விளையாடிக்கொண்டிருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
டாக்கா பிரீமியர் லீக் போட்டியில் விளையாடிக்கொண்டிருந்தபோதே தமிம் இக்பாலுக்கு மைதானத்திலேயே திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது.
இதையடுத்து அவர் அருகில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார்.
பங்களாதேஷில் தற்போது டாக்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது.
இந்த தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில், முகமதின் ஸ்போர்ட்டிங் கிளப் – ஷைன்புகூர் கிரிக்கெட் கிளப் அணிகள் மோதின.
இந்த ஆட்டத்தில் ஷைன்புகூர் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. களத்தடுப்பில் ஈடுபட்ட முகமதின் அணியின் தலைவர் தமிம் இக்பால் விளையாடிக்கொண்டிருந்தபோது அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.
இதையடுத்து மைதானத்துக்கு விரைந்த மருத்துவக் குழுவினர் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர்.
பின்னர் விமானம் மூலம் அவரை டாக்காவில் உள்ள வைத்தியசாலைக்கு கொண்டுசெல்ல முடிவு செய்யப்பட்டது. ஆனால், அவரது உடல்நிலை மிகவும் மோசமாக இருந்ததால் அந்த முடிவு கைவிடப்பட்டு மைதானத்துக்கு அருகிலுள்ள வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.