மட்டக்களப்பு (Batticaloa) காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புதுக்குடியிருப்பு பகுதியில் இன்று (03.04.2025) அதிகாலை சுமார் 3.30 மணியளவில் சிறியரக லொறி ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.
மட்டக்களப்பு கல்முனை சாலை வழியே கல்முனைப் பகுதியில் இருந்து மட்டக்களப்பு நோக்கி சென்று கொண்டிருந்த லொறியே இவ்வாறு வீதியை விட்டு விலகி மதிலுடன் மோதி பின் உயர் அழுத்த மின் இணைப்பு கம்பத்தையும் உடைத்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்ற அதேவேளை லொறியின் முன் பகுதியும் மின்சார கம்பம் மற்றும் மதிலும் பலத்த சேதமடைந்துள்ளன.
விபத்தின் காரணமாக அந்த பகுதியில் மின்சாரமும் தடைப்பட்டுள்ளதுடன், பின்னர் மின்சாரம் வழமைக்குத் திரும்பி உள்ளது.
குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
விபத்துக்குள்ளான பகுதியில் அதிக வளைவுகள் வீதியில் அமைந்து உள்ளதால் சாரதிகள் மிகவும் அவதானமாக வாகனத்தை செலுத்த வேண்டும் எனவும், தற்போது அடிக்கடி ஓரளவு மழை பெய்து வருவதாலும் மிகவும் அவதானமாக வாகனங்களை ஓட்டுநர்கள் செலுத்த வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.