ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அழைப்பின் பேரில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று இலங்கை வருகிறார்.
இந்தியப் பிரதமருக்கான உத்தியோகபூர்வ வரவேற்பு நிகழ்வு நாளை காலை கொழும்பில் உள்ள சுதந்திர சதுக்கத்தில் நடைபெறவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுடனும், ஏனைய பல தரப்பினருடனும் கலந்துரையாடல்களை நடத்துவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சந்திப்புகளின் போது எரிசக்தி, டிஜிட்டல் மயமாக்கல், பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் ஆகிய துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மற்றும் இந்தியாவுடனான கடன் மறுசீரமைப்பு தொடர்பான ஒப்பந்தங்கள் ஆகியவை ஏற்படுத்திக் கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
திருகோணமலையில், இந்திய ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்படவுள்ள சம்பூர் சூரிய மின் உற்பத்தி நிலையத் திட்டம், வெப்பநிலை மற்றும் ஈரப்பதத்தைக் கட்டுப்படுத்தக்கூடிய ஐயாயிரம் மெட்ரிக் டன் தம்புள்ள களஞ்சிய வளாகத்தின் நிர்மானம், ஐயாயிரம் வணக்கஸ்தலங்களின் கூரைகளில் சூரிய மின்னுற்பத்தி தகடுகளை நிறுவும் திட்டம் என்பன இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியினால் இணையவழி ஊடாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளன.
அத்துடன், அவர் அனுராதபுரத்துக்கு விஜயம் மேற்கொள்ளவிருப்பதுடன் இந்திய அரசாங்கத்தின் அன்பளிப்புடன் நிறுவப்பட்ட மஹவ-அனுராதபுரம் தொடருந்து சமிக்ஞை கட்டமைப்பு மற்றும் மறுசீரமைக்கப்பட்ட தொடருந்து பாதையைத் திறந்து வைக்கவுள்ளார்.
ஏப்ரல் 06 ஆம் திகதி பிற்பகல் இலங்கைக்கான சுற்றுப்பயணத்தை நிறைவு செய்யும் இந்தியப் பிரதமர் , நாட்டிலிருந்து புறப்பட்டுச் செல்வார் எனவும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.